மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் செயல்பட்டு வரும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி.) அலுவலகத்தில் டிசம்பர் 17ஆம் தேதி இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் நெல்லையைச் சேர்ந்த முதுநிலை மேலாளர் கல்யாணி (வயது 55) உடல் கருகி உயிரிழந்தார். மற்றொரு உதவி நிர்வாக அதிகாரி ராம் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த அலுவலகத்தில் சுமார் 50 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து நேற்று இரவு ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: மீண்டும் மக்கள் முன் விஜய்! அ.தி.மு.க., மாஜிக்கள் இணைய வாய்ப்பு! ரகசியம் காக்கும் நிர்வாகிகள்!
கூட்டம் முடிந்து ஊழியர்கள் வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த போது, இரவு 8.30 மணி அளவில் திடீரென தீ பற்றிக் கொண்டது. தீ வேகமாக அனைத்து அறைகளுக்கும் பரவியது.

ஊழியர்கள் பதறியடித்து ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். சிலர் கட்டிடத்தில் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து தல்லாகுளம் மற்றும் திடீர் நகர் தீயணைப்பு நிலையங்களிலிருந்து வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிக்கியவர்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது. கடும் போராட்டத்துக்குப் பிறகு தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், ஏர் கண்டிஷனரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. திலாகர் திடல் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தொகுதிக்கு ரூ.20 கோடி... இதை குறிச்சு வச்சிக்கோங்க ஸ்டாலின்... திமுகவை எச்சரித்த நயினார் நாகேந்திரன்...!