தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ பாலியல் வன்கொடுமை வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறையான சிபிஐ (CBI) உடனடியாகத் தனது கையில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும், இத்தனை ஆண்டுகள் அவரைத் தப்பிக்க வைத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் பின்புலங்களை முழுமையாக வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா மிகக் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள சூழலில், இது தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் எச்.ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜெம் வீரமணி தொடர்புடைய பாலியல் வழக்கை மாநிலக் காவல்துறையோடு மட்டுப்படுத்தாமல் சிபிஐ வெளிப்படைத்தன்மையோடு விசாரிக்க வேண்டும்.

மேலும், இத்தனை ஆண்டுகளாக இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் இழுத்தடித்து, சட்டத்தின் பிடியிலிருந்து அவரைத் தப்பிக்க வைக்கத் துணைநின்ற அனைத்துக் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் தொடர்புடைய நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பூதாகரமாக வெடிக்கும் பாலியல் வழக்கு..! ஜெம் வீரமணிக்கு சொந்தமான இடங்களில் அதிரடி ரெய்டு..!
தொடர்ந்து பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர், எதிர்காலத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடூரப் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் அறவே நடைபெறாமல் இருக்க வேண்டுமானால், ஜெம் வீரமணி வழக்கில் தமிழக அரசு மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் ஆவணங்களும் எவ்வித ஓட்டைகளும் இன்றி முழுமையானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பும் கடுமையான தண்டனையும், பெண்களை வதைக்கத் துடிக்கும் கொடூரக் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் எச்சரிக்கை பாடமாக அமையும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் அரசியல் சமரசங்கள் எதற்கும் இடம் தராமல், பாதிக்கப்பட்ட ஏழைப் பெண் குழந்தைகளுக்கு முழுமையான நீதி கிடைக்கச் செய்யும் வகையில் தமிழக அரசும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான நிர்வாகமும் பாரபட்சமற்ற முறையில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி விஷயத்தில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தொடர்பு.? கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல்..! பூதாகரமாகும் பிரச்சனை.!!