அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அகதிகள், வெளிநாட்டினர் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறி சொந்த நாடுகளுக்குச் சென்றால் 1000 டாலர் உதவித்தொகை வழங்கப்படும், போக்குவரத்துக்கு உதவி செய்யப்படும் என்று அமெரிக்க உள்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் 2வது முறையாக பதவி ஏற்றபின், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அகதிகள், வெளிநாட்டினர், குடியேறிகளை அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை தொடங்கியுள்ளார். இந்தியர்கள் 500க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த நிலையில் அவர்களை அமெரிக்க அரசு இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. அதேபோல கனடா, மெக்சிகோ, வடஅமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களையும் அவர்கள் நாடுகளுக்கு அமெரிக்கா அனுப்பி வருகிறது.
இதையும் படிங்க: மறுபடியும் ஆரம்பிச்சுட்டாரு அதிபர் ட்ரம்ப்.. அமெரிக்காவுக்கு வெளியே தயாராகும் திரைப்படங்களுக்கு 100% வரி..!
இருப்பினும் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து அவர்களை அனுப்பி வைக்கும் பணி பெரிதாக இருக்கிறது. இதையடுத்து, சட்டவிரோதக் குடியேறிகள், அகதிகள், புலம்பெயர்ந்தவர்கள் தாமாக முன்வந்து, தங்கள் நாடுகளுக்குச் சென்றால் அவர்களுக்கு 1000 டாலர் ஊக்கத்தொகையும், பயணச் செலவையும் தருவதாக அமெரிக்க உள்துறை அறிவித்துள்ளது.

ஏனென்றால் சட்டவிரோத குடியேறி ஒருவரை கண்டுபிடித்து, கைது செய்து, அடைத்துவைத்து, அவரை அவரின் நாட்டுக்கு அனுப்பி வைக்க நபர் ஒருவருக்கு 17ஆயிரம் டாலர் செலவாகிறது. அதற்கு 1000 டாலரை ஊக்கத்தொகையாக அளித்து புலம்பெயர்ந்தவர்களை அனுப்ப அமெரிக்க உள்துறை முடிவு செய்துள்ளது. அதிபர் ட்ரம்ப் 2வது முறையாக ஆட்சிக்குவந்தபின் ஜனவரி 20ம் தேதியிலிருந்து அமெரிக்காவில் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1.52 லட்சம் மக்களை திருப்பி அனுப்பியுள்ளது. ஜோபிடன் ஆட்சியின்போது பிப்ரவரி முதல் ஏப்ரல் முதல் 1.95 லட்சம் பேரை திருப்பி அனுப்பியது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர்களுக்கு தாமாக வெளியேறாவிட்டால் அவர்களுக்கு கடும் அபராதம், குடியுரிமை பறித்தல், சிறை தண்டனை என அதிபர் ட்ரம்ப் அரசு மிரட்டி வருகிறது. உள்துறை பாதுகாப்புஅமைச்சர் கிரிஸ்டி நியோம் விடுத்த அறிக்கையில் “ நீங்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தால், நீங்களே உங்களை அமெரிக்கவில் இருந்து விடுவித்து, சொந்த நாட்டுக்கு சென்றுவிடுங்கள், இவ்வாறு செய்தால் நீங்கள் கைது நடவடிக்கையில் இருத்து தப்பிக்கலாம்.
இதற்காக சிபிபி எனும் செயலியை உருவாக்கியுள்ளோம். அந்த செயலியில் தாமாக அமெரிக்காவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோர் தங்களின் விவரங்களைப் பதிவு செய்தால் எளிதான நடைமுறையுடன் வெளியேறலாம். நல்ல முறையில் அமெரிக்காவில் இருந்து வெளியேறினால் நீங்கள் மீண்டும் அமெரிக்காவுக்குள் பணிநிமித்தமாக வரலாம், செல்லலாம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வலுக்கும் வரி யுத்தம்: சீனா மீது மேலும் 50% வரி விதிப்பேன்.. அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை..!