தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ‘ராம் யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டதையும், 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காவி உடையில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் வேடங்களில் பங்கேற்றதையும் கடுமையாகக் கண்டித்துள்ளார்.சுற்றுலாவை முன்னிறுத்த வேண்டிய அரசு நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட மத அடையாளம் கொண்ட பெயரும் காட்சியமைப்பும் வழங்கப்பட்டதன் நோக்கம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை நடத்தும் நிகழ்ச்சிகளில் அனைத்து மதங்கள், நம்பிக்கைகள் மற்றும் பண்பாட்டு மரபுகளுக்கும் சமமான அணுகுமுறை பின்பற்றப்படுகிறதா என்றும் வினவியுள்ளார்.குழந்தைகளை ஒரே மாதிரியான காவி உடையில் பங்கேற்கச் செய்தது யாருடைய முடிவு என்றும், அதற்கான திட்டமிடல், அனுமதி மற்றும் நிர்வாகப் பொறுப்பு யாரிடம் இருந்தது என்றும் அவர் கேட்டுள்ளார். தனுஷ்கோடியின் வரலாறு, கடல்சார் வாழ்வியல், மீனவர்களின் பண்பாடு, ஈழத் தமிழர்களுடனான வரலாற்றுத் தொடர்பு போன்ற பல்வேறு அடையாளங்கள் இருக்கும்போது, அரசு சுற்றுலா நிகழ்ச்சியில் ஒரே மதக் கதையாடல் முன்னிலைப்படுத்தப்பட்டதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு சுற்றுலாத் துறை வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அரசு நிர்வாகத்தின் பண்பாட்டு நிகழ்ச்சிகள் எந்த மதத்திற்கும் எதிராகவோ, ஆதரவாகவோ அல்லாமல் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் அரசியலமைப்புச் சார்ந்த மதச்சார்பற்ற கொள்கைக்கு ஏற்பவும் அமைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தவெக ஆட்சியில் தொடரும் சர்ச்சை... கட்டி முடிக்கப்படாத மருத்துவமனைக்கு மீண்டும் புதிய டெண்டர்...!
அரசுத் துறைகளின் நிகழ்ச்சிகளில் மத அடையாளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ளனவா என்பதையும் தமிழ்நாடு அரசு மக்களுக்கு விளக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் ஒரு தனிப்பட்ட கலை நிகழ்ச்சியாகக் கடந்து செல்லாமல், அரசு நிகழ்ச்சிகளின் நோக்கம், நிர்வாகப் பொறுப்பு மற்றும் மதச்சார்பற்ற நடைமுறை குறித்து உரிய ஆய்வு நடைபெற வேண்டிய விஷயமாக உள்ளது என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தவெகவில் இணைகிறார் செம்மலை? முதல்வர் விஜய்யின் தாராபுரம் பிரசாரத்தில் நடக்கும் மிகப்பெரிய சம்பவம்?!