தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடந்த ஜூலை 15ம் தேதி கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களுக்கு அரசு சேவைகளை வீடுவீடாக கொண்டு சேர்க்கும் முன்னோடி திட்டமாகும். இத்திட்டம், 15 துறைகளை உள்ளடக்கி, கிராமப்புறங்களில் 46 சேவைகளையும், நகர்ப்புறங்களில் 43 சேவைகளையும் வழங்குகிறது. பட்டா மாறுதல், ரேஷன் அட்டை, மின்சார இணைப்பு பெயர் மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, சிறு-குறு வணிக கடன்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை மக்கள் தங்கள் வீட்டருகே பெற முடியும்.

முதல் கட்டமாக, 10,000 முகாம்கள் மூலம் மக்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன. ஒரு லட்சம் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு முகாம்களின் விவரங்களை விளக்கி, தேவையான ஆவணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். 45 நாட்களுக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் நாளை 6 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்.. எந்தெந்த ஏரியா தெரியுமா..?
இத்திட்டம், டிஜிட்டல் அறிவு அல்லது இணைய வசதி இல்லாதவர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய மூன்று கட்டங்களின் கருத்துகளின் அடிப்படையில், இந்த நான்காம் கட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் சுயமரியாதையை மேம்படுத்துவதற்கு இத்திட்டம் உதவும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (06.08.2025) திருவொற்றியூர் மண்டலம், வார்டு-6ல் ராஜா சண்முகம் நகர், 4வது தெருவில் உள்ள சமூகநலக் கூடம், மாதவரம் மண்டலம், வார்டு-33ல் பாரதியார் தெருவில் உள்ள ஏழுமலை நாயக்கர் மண்டபம், அம்பத்தூர் மண்டலம், வார்டு-84ல் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு காலனி, கிரண் பேலஸ், அண்ணாநகர் மண்டலம், வார்டு-99ல் ராஜா அண்ணாமலை சாலையில் உள்ள தர்மபிரகாஷ் திருமண மண்டபம், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-153ல் போரூர், ஆறுமுகம் நகரில் உள்ள பி.ஜே.என்.மஹால், பெருங்குடி மண்டலம், வார்டு-185, திரௌபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்.ஆர்.கே. மஹால் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: AFTER 18 YEARS.. மீண்டும் மாஸாக.. சென்னையை கலக்க வருகிறது 'டபுள் டக்கர்' பேருந்துகள்..!!