மலேசியாவில் முனைவர் பட்ட ஆராய்ச்சி படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் தொடர்பான கல்வி உதவித்தொகை விவகாரம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் திசு பொறியியல் மற்றும் மீளுருவாக்க மருத்துவம் துறையில் பிஎச்டி பயின்று வரும் இந்த மாணவர், தனது இரண்டாம் ஆண்டு படிப்புக்கான நிதி தாமதமானதால் ஆராய்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்படும் அபாயம் உள்ளதாகவும் காணொளிகள் வெளியிட்டு கண்ணீர் மல்க முறையிட்டார்.
இந்தத் திட்டம் முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதன்கீழ் ஒரு மாணவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சமாக முப்பத்தாறு லட்சம் ரூபாய் வரை கல்விக் கட்டணம், வாழ்க்கைச் செலவு மற்றும் ஆராய்ச்சிச் செலவுகள் வழங்கப்படுகிறது. பாரதிதாசனுக்கு முதலாம் ஆண்டில் முழுத் தொகையும் வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரண்டாம் ஆண்டிற்கும் கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்கான தொகை ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், ஆராய்ச்சிப் பொருட்களுக்கான கூடுதல் நிதி குறித்து சிக்கல் எழுந்தது.மாணவர் ஏப்ரல் மாதத்திலிருந்தே ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், சில ரகசிய ஆராய்ச்சி ஆவணங்களைத் தவிர தேவையானவை அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆனால் அரசு தரப்பில் உரிய செலவுக்கணக்குகள் மற்றும் பல்கலைக்கழக பரிந்துரை முழுமையாக சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அதனால்தான் தாமதம் ஏற்பட்டது என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு இதுவரை கிட்டத்தட்ட நாற்பத்தெட்டு லட்சம் ரூபாய் வரை விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்த விவகாரம் சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டபோதும், சமூக வலைதளங்களில் பரவியபோதும் எதிர்க்கட்சிகள் அரசைக் கடுமையாக விமர்சித்தன. மாணவருக்கு அரசு உதவத் தவறினால் தாங்களே உதவுவதாக சில தலைவர்கள் அறிவித்தனர். இதற்கு பதிலளித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தினார். பாரதிதாசன் தனது தம்பி போன்றவர் என்றும், அவரது படிப்பு முழுமையாக நிறைவடைய அரசு அனைத்து வகையிலும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: துரோக பட்டம் சூட்டுகிறார்கள்! துரோகி என்கிறார்கள்! திமுகவை விட்டு விலகியது ஏன்? திருமாவளவன் காட்டம்!

அதன்படி, மாணவர் பாரதிதாசனுக்கு முழு உதவித்தொகையும் விடுவிக்கப்பட்டது. முன்னதாக 12 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் எஞ்சிய 23 லட்சத்து 95 ரூபாயும் ஒரே நாளில் விடுவிக்கப்பட்டது. வாழ்க்கை செலவுத் தொகை 6 லட்சம் ரூபாய் மாணவன் வங்கி கணக்கிற்கும் ஆராய்ச்சி கல்விக்கான 17 லட்சம் ரூபாய் பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தலித் இளைஞர்கள், மாணவர்களுக்கு மோசமாக வஞ்சகம் திமுக செய்ததாக தெரிவித்தார். பாரதிதாசன் மீது அக்கறை இருப்பது போல் திமுக நாடகம் ஆடுவதாக அமைச்சர் வன்னி அரசு குற்றச்சாட்டு முன் வைத்தார். மலேசியாவில் பயிலும் மாணவன் பாரதிதாசன் கல்வி உதவித்தொகை விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது என்று கூறிய அவர், மாணவர் பில் சமர்ப்பிக்காத நிலையிலும் முழுத் தொகையையும் அரசு விடுவித்துள்ளது என்றார்.
இதையும் படிங்க: தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?