வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டியில் அரசுப் பள்ளி மாணவிகள் இருவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேரணாம்பட்டியில் உள்ள கிங் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவிகள் இருவர் திடீரென மாயமாகியுள்ளனர்.
பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்ப வேண்டிய மாணவிகள் இருவரும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இருப்பினும், மாணவிகள் கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகள் எடுத்துச் சென்ற செல்போன்களின் அழைப்பு மற்றும் பதிவுகள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். பேரணாம்பட்டியில் அரசுப் பள்ளி மாணவிகள் இருவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுக்கு ஒரு என்டே இல்லையா?
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி அக்டோபர் 12ஆம் தேதி அதிகாலை வீட்டிலிருந்து மாயமானார். சிறுமியைத் தேடி ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஏரிகள், குளங்கள், வனப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தேடுதல் நடத்தப்பட்டது. சுமார் 600 செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன், கண்காணிப்பு கேமரா காட்சிகளும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. 10வது நாளாக சிறுமியைத் தேடி சிபிசிஐடி போலீசாரே விழிபிதுங்கி நிற்கின்றனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சஞ்சய், அக்டோபர் 22ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மாயமானார். அவர் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்டு, பின்னர் ஒருவருடன் பயணம் செய்தது அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதே காலகட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே மாயமான 9ஆம் வகுப்பு மாணவரும் பெங்களூருவில் கண்டுபிடிக்கப்பட்டார். சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவர் ஒருவரும் சென்னையில் மீட்கப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் பள்ளிக்குச் சென்ற மூன்று மாணவிகள் வீடு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். பின்னர், மாயமான மூன்று மாணவிகளும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மீட்கப்பட்டனர்.
அதேபோல், சேலம் மாவட்டம் ஓமலூரில் ஒரே நேரத்தில் நான்கு அரசுப் பள்ளி மாணவர்கள் மாயமான சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நான்கு மாணவர்களையும் இரண்டு மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்டனர்.
மேலும், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் மூவர் பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டு மாயமான நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது மீட்கப்பட்டனர்.
இதற்கிடையே, செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்த நான்கு பள்ளி மாணவர்கள் அக்டோபர் 3ஆம் தேதி விளையாடச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தேடுதல் நடைபெற்ற நிலையில், மறுநாள் திருநீர்மலை ஏரியில் நான்கு குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டனர்.
ஏரியில் குளிக்கச் சென்றபோது சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. சில சம்பவங்களில் குழந்தைகள் விரைவாக மீட்கப்பட்டாலும், சில வழக்குகளில் தேடுதல் நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில், பேரணாம்பட்டியில் இரண்டு மாணவிகள் மாயமான சம்பவமும் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் எங்கு சென்றார்கள், அவர்கள் தாமாகச் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: செஞ்சி சிறுமி சம்பவத்தில் திடுக் திருப்பம்... நேராக கரும்பு தோட்டத்திற்குள் சென்ற மோப்ப நாய்... நடந்தது என்ன?
இதையும் படிங்க: வேலூர் துயரம்... பட்டாசு ஆலை வெடி விபத்து..! முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு..!!