மின் கட்டண உயர்வு முடிவை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட்டு, தற்போதைய கட்டணத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். மின்வாரியத்தின் நிதி நிலைமையை மேம்படுத்த மின்வாரிய நிர்வாகத்தைச் சீரமைத்து, இழப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிடாவிட்டால், மக்களுடன் இணைந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் கூறினார்.
2022-ம் ஆண்டு திமுக ஆட்சியில் 52 சதவீதம் வரை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் அதிகபட்சமாக 6 சதவீதம் அல்லது முந்தைய நிதியாண்டின் பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ அதன்படி உயர்த்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தற்போது இந்த ஆண்டு 3.86 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், “முதலமைச்சர் முடிவெடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார் என்பதையும் சுட்டி காட்டியுள்ளார். தொழில் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை மட்டும் உயர்த்த அரசு முடிவு செய்தாலும், அது மக்களை கடுமையாகப் பாதிக்கும். ஏற்கெனவே திமுக ஆட்சியில் தொழிற்சாலைகளுக்கான மின்சாரக் கட்டணம் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால், தமிழ்நாடு முழுவதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மக்கள் முன்னாடியே தூக்குல போடணும்..! தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கணும்..! வேல்முருகன் வலியுறுத்தல்..!
மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டால் மீதமுள்ள தொழில் நிறுவனங்களும் மூட நேரிடும். இதனால் வேலை இழப்பு அதிகரித்து, வேலையில்லா திண்டாட்டம் மேலும் மோசமாகும் என எச்சரித்துள்ளார். மின் கட்டண உயர்வு முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் இல்லையெனில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மக்களுடன் இணைந்து தீவிர போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மேகதாது விஷயத்தில் என்ன மௌனம்.? கர்நாடக காங்கிரஸுக்கு அழுத்தம் குடுங்க... வேல்முருகன் வலியுறுத்தல்..!!