பெண்களுக்கு இலவசம் என அறிவித்து தங்கள் வாழ்வாதாரத்தை மோசமாக்கினாலும், நடுரோட்டில் நின்ற வெற்றிப் பயண பேருந்துக்கு உதவிய தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள். - திருவாரூரில் திரைப்பட நடிகர் வடிவேலு பாணியில் தள்ளு தள்ளு தள்ளு என வெற்றி பயண பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்ய உதவிய பொதுமக்கள்.
தமிழகம் முழுவதும் நீண்ட தூர மற்றும் ஏசி பேருந்துகள் தவிர்த்து மற்ற அனைத்து வகையான பேருந்துகளிலும், பெண்களுக்கு இலவசம் என அறிவித்து வெற்றி பயணம் என்ற பெயரில் அரசு போக்குவரத்து கழகங்கள் அரசு பேருந்துகளை இயக்கி வருகின்றன.
என்ன தான் இலவசம் என அறிவித்தாலும் அந்த அரசு பேருந்துகளில் செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படும் சூழல் தான் நிலவுகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பேருந்துகள் முறையான பராமரிப்புகள் இல்லாத காரணத்தினால் பாதி வழியில் நடுரோட்டில் நின்று விடும் அவல நிலை இருந்து வருகிறது.
இதையும் படிங்க: “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?
நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் திருச்செந்தூருக்கு சென்ற பேருந்து நடுரோட்டில் நின்ற காரணத்தினால் பள்ளி செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அரசு பேருந்தை தள்ளி சாலை ஓரமாக நிறுத்தி வைத்தனர். இதேபோல மற்றொரு சம்பவம் இன்று திருவாரூர் அருகே பேரளம் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
பேரளம் பேருந்து நிலையத்துக்கு முன்னதாக உள்ள பேரளம் ரயில்வே கேட் பகுதியில் இன்று திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு வெற்றி பயணம் பேருந்து ஒன்று சென்றுள்ளது. ரயில்வே கேட்டுக்கு மிக அருகில் வந்த நிலையில் திடீரென அந்த வெற்றிப் பயண பேருந்து நடுரோட்டில் நின்றுள்ளது.
அரசு பேருந்து ஓட்டுநர் பலமுறை முயற்சித்தும் அவரால் பேருந்தை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து நெரிசல் உண்டானது.
திருத்துறைப்பூண்டி - திருவாரூர் - பாண்டிச்சேரி - சென்னை செல்லும் மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடு ரோட்டில் வெற்றிப் பயண பேருந்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் செய்வதறியாது திகைத்தனர். இந்த நிலையில் அரசு பேருந்துக்கு கை கொடுத்தனர் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள்.
தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர், தனியார் பேருதில் பயணம் செய்த பொதுமக்கள், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும், திரைப்பட நடிகர் வடிவேலு பானியில் அரசு பேருந்தை தள்ளு தள்ளு தள்ளு என தள்ளி ஸ்டார்ட் செய்ய பலமுறை முயற்சி செய்தனர்.
இவர்களின் தீவிர முயற்சியால் அரை மணி நேரத்திற்கு பிறகு நடுரோட்டில் நின்ற அரசின் வெற்றிப் பயண பேருந்து ஸ்டார்ட் செய்யப்பட்டு அங்கிருந்து நகர்ந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் சீரானது.
இதையும் படிங்க: போராட்டக்களங்களில் போலீசுடன் வாக்குவாதம் கூடாது: செய்தியாளர்களுக்கு பிசிஐ வழிகாட்டுதல்!