சிறுபான்மையின மக்களின் உரிமைக்காகவும் அரசியலமைப்பைக் காக்க வேண்டிய ஜனநாயகப் பொறுப்பிற்காகவும் தமிழக வெற்றிக் கழகம் என்றும் முதன்மைச் சக்தியாகக் களத்தில் நிற்கும் என விஜய் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய பாஜக அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது என்றும் வரவேற்கத்தக்க வகையில் சட்டதிருத்ததிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது என்றும் இந்த இடைக்கால நடவடிக்கையில் நமது தமிழக வெற்றிக் கழகம் முக்கியப் பங்காற்றியது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: மதுரையில் விஜய்! சீக்கிரம் சந்திப்போம் நண்பா, நண்பீஸ்.. செம குஷியில் ரசிகர்கள்..!

வக்ஃப் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் இருந்தபோது, அதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றது. இந்த நிலையில், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன? இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை? இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மக்களுக்கு முன்னுதாரணமாக முதன்மை நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டாமா? இஸ்லாமியர்கள் உரிமைகள் பறிபோவதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என்று பேசிவரும் திமுக அரசு, செயல் அளவில் அதற்கான நடவடிக்கைகளை எப்போது மேற்கொள்ளும்? என அடுக்கடுக்கான கேள்விகளை விஜய் முன்வைத்துள்ளார்.

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்பது அடையாளத்திற்குக் கடந்து போவதாக இருக்காமல், அரசியலமைப்பு ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய காலத்திற்கான அறைகூவலாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய விஜய், சிறுபான்மையின மக்களின் உரிமைக்காகவும் அரசியலமைப்பைக் காக்க வேண்டிய ஜனநாயகப் பொறுப்பிற்காகவும் தமிழக வெற்றிக் கழகம் என்றும் முதன்மைச் சக்தியாகக் களத்தில் நிற்கும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த விஜய்.. பதட்டமாக உள்ளது.. தொண்டர்களுக்கு சொன்ன விஷயம்..!