விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி, திண்டிவனம் 20-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா, அலுவலக பணியில் ஈடுபட்டிருந்த முனியப்பனிடம் சென்று தன் வார்டில் நடைபெற்ற பணிக்கான நிதி ஒதுக்குதல் தொடர்பாக கோப்பினை எடுத்து வர கேட்டுள்ளார்.

அதற்கு முனியப்பன் சரியாக பதில் அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரம்யா முனியப்பனை ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரனிடம் இதுபற்றி புகார் கூறியுள்ளார். அதன் பின் நகராட்சி ஆணையர் அறைக்கு துணை ஆட்களுடன் சென்ற ரவிச்சந்திரன் முனியப்பனை மிரட்டும் தோனியில் பேசியுள்ளார். பின்னர் ரம்யாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு போ என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மனு கொடுக்கும் முகாமா? மக்களை முடக்கும் முயற்சியா? திமுக அரசை சாடிய அதிமுக
அப்போது நகராட்சி ஆணையர் அறையில் நின்றிருந்த முனியப்பன், திடீரென மன்னித்து விடுங்கள் என இருக்கையில் அமர்ந்திருந்த ரம்யா ராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரை மன்னிப்பு கேட்க சொல்லியதோடு காலில் விழ வைத்ததாக அதிமுக, பாஜக, விசிக உள்ளிட்ட கட்சியினர் போர்க்கொடி தூக்கினர். மேலும் சம்மந்தபட்ட 20-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா மற்றும் காலில் விழ வற்புறுத்திய நகரமன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
அதுமட்டுமென்றி நகராட்சி ஆணையர் இல்லாத நேரத்தில் அவருடைய அறையை சட்ட விரோதமாக பயன்படுத்தியுள்ளனர் என்றும், எனவே நகராட்சி ஆணையர் அலுவலக அறையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி மேலாளர் நெடுமாறன் மற்றும் திண்டிவனம் காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
இதனிடையே காலில் விழுந்த முனியப்பன், அவரது கையை தன் இடுப்பில் வைத்து மன்னிப்பு கேட்டதாகவும், தவறான சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறி திண்டிவனம் டி.எஸ்.பி பிரகாஷிடம் ரம்யா புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் திண்டிவனம் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
https://x.com/i/status/1963113705358737586
இந்த சம்பவத்திற்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை பதிவிட்டு, இதுதான் திமுகவின் சமூக நீதிக்கான மாதிரி. திண்டிவனத்தில் உள்ள பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பொது ஊழியர், திமுக கவுன்சிலர்களால் தொடர்ந்து முற்றுகையிடப்பட்டு, திமுக கவுன்சிலர் ரம்யாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்.
திமுக அரசு ஊழியர்களை அவமானப்படுத்துவது இது முதல் முறையல்ல. இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல; முன்னதாக, திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஒரு அரசு ஊழியரை சாதிய அவதூறுகளால் திட்டியிருந்தார். சமூக நீதி என்று திமுக கூறுவது உண்மையில் சமூக அநீதியைத் தவிர வேறில்லை என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து திண்டிவனம் டி.எஸ்.பி பிரகாஷ், சம்மந்தப்பட்ட ஊழியரை அழைத்து விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் நகர் மன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் ரம்யா மற்றும் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திண்டிவனம் போலசார் ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர். இதனிடையே திண்டிவனம் நகர்மன்ற தலைவரின் கணவரை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: Insta காதல் மோகம்... ரயிலில் பறந்த மாணவி! நகை உள்ளிட்டவற்றை அபேஸ் செய்த பலே கில்லாடி இளைஞன்