விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் கோவிந்த நல்லூரைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை டி.ஆர்.ஓ., லைசென்ஸ் பெற்று செயல்படுகிறது.இங்கு ஞாயிறு விடுமுறையாக இருந்தும் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வெடி தயாரித்த போது ஒரு அறையில் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவியது. இந்த வெடி விபத்தில் 4 அறைகள் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த முத்து வட்டை, ஜானகி, இந்திராணி, பிச்சியம்மாள், அழகம்மாள், காளியம்மாள், பாக்கியலட்சுமி, பொன்னழகு உள்ளிட்ட 23 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதையும் படிங்க: எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பேச்சியம்மாள் என்ற மூதாட்டி இன்று அதிகாலையிலும், பஞ்சவர்ணம் என்பவர் காலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, 25 பேர் பலியான இந்த வெடி விபத்து தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை விபத்தை தாமாகவே முன்வந்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனக்கோரி வழக்கறிஞர் கருணாநிதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பு முறையிட்டார்.
மேலும் தேர்தல் காலம் என்பதால் அமைச்சர்கள் யாரும் அப்பகுதிக்குச் சென்று பார்க்கவில்லை என்றும், உரிய இழப்பீடு அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் ஏற்கனவே இது தொடர்பான வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் பதிலளிக்க வலியுறுத்தி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுவிட்டது. ஏன் இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை என்பதற்கு சரியான வழிகாட்டுதல்கள் தேவை? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் முதன்மை செயலாளர் உளிட்ட அலுவலர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் இழப்பீடு வழங்குவது தொடர்பாக உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து! வெளியானது FIR!! 25 பேர் உயிரை குடித்தது எது?