தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பி வரும் தமிழக வெற்றிக் கழகம் , இன்று தனது அரசியல் பயணத்தின் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு, கழகத் தலைவர் விஜய் அவர்கள் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், ‘நெஞ்சில் குடியிருக்கும்’ தனது தோழர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அனல் பறக்கும் அறிக்கை ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.
இதையும் படிங்க: 13 பேர் சாவுக்கு பதில் சொல்லுங்கள்! EPS-ஐ வறுத்தெடுத்த தவெக செங்கோட்டையன்!
முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள்.
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க.
2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். எனவே இச்சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்.
பனையூர் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், விஜய்யின் இந்த அதிரடி அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: யாருக்கும் பாதுகாப்பு இல்லை! அடையாறு படுகொலை மற்றும் நந்தனம் வன்கொடுமைக்கு தவெக தலைவர் கண்டனம்