தமிழக சட்டமன்றத்தின் 2026ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 20, செவ்வாய்) காலை 9.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி முழு உரையை வாசிப்பாரா அல்லது புறக்கணிப்பாரா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதம் நடைபெறுகிறது. வரும் சட்டமன்றத் தேர்தல் பின்னணியில், அரசின் முக்கிய கொள்கைகள் மற்றும் சாதனைகள் குறித்த அறிவிப்புகள் உரையில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரம்பரியமாக, ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றத்தின் முதல் அமர்வு ஆளுநரின் உரையுடன் தொடங்கும். இதன்படி, நாளை காலை 9.10 மணிக்கு ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இருந்து ஆளுநர் ரவி காரில் புறப்படுவார். காலை 9.25 மணிக்கு தலைமைச் செயலகம் சென்றடைவார். அங்கு போலீஸ் அணிவகுப்பு மற்றும் பேண்ட் வாத்திய இசையுடன் வரவேற்பு அளிக்கப்படும். அதன்பின், சபாநாயகர் எம்.அப்பாவு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து ஆளுநரை அழைத்துச் செல்வார்.
இதையும் படிங்க: “முதலீடுகள் முடக்கம், தகுதியற்ற பேராசிரியர்கள்!” தமிழக அரசை தாக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு!
சட்டமன்ற அரங்கில் ஆளுநர் தனது இருக்கையில் அமர்ந்ததும், சபாநாயகர் அவருக்கு வலதுபுறம் இருப்பார். காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். உடனடியாக ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றத் தொடங்குவார். உரையில் தமிழக அரசின் செயல்பாடுகள், கொள்கைகள், சாதனைகள் விவரிக்கப்படும். உரை முடிந்ததும், அதன் தமிழ் மொழிபெயர்ப்பை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். இதனுடன் அன்றைய அமர்வு நிறைவடையும். அதன்பின், அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெறும். இதில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு எத்தனை நாட்கள் ஒதுக்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
சட்டமன்றக் கூட்டம் ஜனவரி 23 (வெள்ளி) வரை நீடிக்கும் எனத் தெரிகிறது. ஆளுநர் ரவியின் கடந்தகால நடவடிக்கைகள் இந்த எதிர்பார்ப்புக்கு காரணம். 2021 செப்டம்பரில் தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்ற ரவி, 2022-ல் முதல் உரையை முழுமையாக வாசித்தார். ஆனால், அதன்பின் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஏற்பட்ட உறவு மோதல் காரணமாக, அவர் உரையை முழுமையாக நிகழ்த்தவில்லை.

2023-ல் நடந்த முதல் கூட்டத்தில், மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் போன்ற சொற்களைத் தவிர்த்து வாசித்தார். இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டதும், ஆளுநர் பாதியில் வெளியேறினார். 2024-ல், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி உரையைத் தொடங்காமலேயே வெளியேறினார்.
அதேபோல், கடந்த ஆண்டு ஜனவரி 6-ல் தேசிய கீதம் இல்லாததைக் கண்டித்து வெளியேறினார். இருப்பினும், சபாநாயகர் உரையைத் தமிழில் வாசித்து அவைக்குறிப்பில் சேர்த்தார். தொடர்ந்து உரையைப் புறக்கணித்து வரும் ஆளுநர், இந்த ஆண்டு முழுமையாக வாசிப்பாரா என்பது கேள்விக்குறி. தேர்தல் அருகில் இருப்பதால், அரசியல் அழுத்தங்கள் இதைத் தீர்மானிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருக்குறள் சனாதன தர்மத்தின் வேர்! திருவள்ளுவர் தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!