நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பிரச்சாரத்தின்போது, கடந்த 27ம் தேதி அன்று வேலுசாமிபுரத்தில் ஏற்பட்ட நெரிசல், 41 பேரின் உயிரைப் பறித்தது. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்ததால் கூட்ட நிர்வாகத்தில் குழப்பம் ஏற்பட்டு, நெரிசல் ஏற்பட்டதாக எப்ஃஐஆரில் கூறப்பட்டுள்ளது. தவெக-வின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் பஸ்ஸி எனந்த் ஆனந்த், இணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் FIR-ல் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைக்க, அந்த ஆணையமும் தமது விசாரணையை தொடங்கி உள்ளது. மற்றொருபுறம் காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஆனால், கரூர் நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் திமுகவின் சதி உள்ளதாகவும், செந்தில் பாலாஜிதான் அதற்கு காரணம் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரப்பப்பட்டன.
இதையும் படிங்க: கரூர் சம்பவத்தில் பாதுகாப்பு குறைபாடா? ஆதாரத்துடன் அமுதா IAS கொடுத்த விளக்கம்..!
இதையடுத்து, கரூர் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.ஆனாலும் ஏற்கனவே சோஷியல் மீடியாவில் அவதூறு பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பாஜகவை சேர்ந்த சகாயம், தவெக நிர்வாகிகள் சிவநேசன், சரத்குமார் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை பிரபல யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் கைது செய்தனர். கரூர் சம்பவம் குறித்து தன்னுடைய ரெட் பிலிக்ஸ் யூடியூப் சேனலில், 'கரூர் நெரிசல் மர்மம்: சொல்லப்படாத உண்மை' என்ற வீடியோவில் அவதூறு பரப்பும் வகையில் பேசியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று காலையில் 7.30 மணிக்கு, ஜெரால்டின் வீட்டிற்கே சென்று, அவரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை சென்னை காவல் ஆணையரகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

பெலிக்ஸ் ஜெரால்ட், தமிழ் யூடியூப் உலகில் பிரபலமானவராவார். அவரது சேனல் அரசியல், சமூக பிரச்சினைகளை விவாதிக்கிறது. இந்தக் கைது, டிஜிட்டல் ஊடகங்களில் தவறான தகவல்களின் ஆபத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட யூடியூபர் ஃபெலிக்ஸ் மாரடைப்பு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக மருத்துவமனையில் உள்ளனர்.
இதையும் படிங்க: VerSe Innovation: AI சக்தியால் 88% வருவாய் வளர்ச்சி.. FY26-ல் இலாபம் நோக்கி பயணம்..!!