சென்னை, டிசம்பர் 13: பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் இன்று காலை சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 'ரெட் அண்ட் ஃபாலோ' திரைப்படத் தயாரிப்பாளர் புருஷோத்தமனை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்தக் கைது நடந்துள்ளது.
கடந்த ஆண்டு பெண் போலீசார் குறித்து இழிவாகப் பேசியதாக கைது செய்யப்பட்டு சிறை சென்ற சவுக்கு சங்கர், திமுக அரசுக்கு எதிரான விமர்சனங்களால் தொடர்ந்து வழக்குகளைச் சந்தித்து வருகிறார்.
இன்று காலை இரண்டு போலீஸ் வேன்களில் 20க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கரின் வீட்டுக்கு சென்றனர். இதை அறிந்த சவுக்கு சங்கர், தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு, “போலீசார் என்னை கைது செய்ய வந்துள்ளனர்.
இதையும் படிங்க: முன்கூட்டியே கணித்தார் சவுக்கு சங்கர்!! அதிகாலை வீட்டிற்கு வந்த போலீஸ்!! அதிரடி கைது!
வழக்கறிஞர் வரும் வரை கதவு திறக்க மாட்டேன்” என்று தெரிவித்தார். போலீசார் கதவைத் திறக்கக் கோரியும் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கதவை உடைத்து போலீசார் உள்ளே நுழைந்து சவுக்கு சங்கரை கைது செய்தனர். தற்போது சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் தயாரிப்பாளர் புருஷோத்தமன் அளித்த புகாரின்படி, சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனலில் தவறான தகவல் பரப்பியதாகவும், அதை நீக்கக் கோரியபோது தன்னை மிரட்டி தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மற்றும் அவரது யூடியூப் குழுவினர் சிலரும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அவர்களையும் போலீசார் தேடி வருவதாகத் தெரிகிறது.
சவுக்கு சங்கர் இந்தக் கைதுக்கு காரணம், சென்னை போலீஸ் கமிஷனர் குறித்து பினாமி முதலீடு பற்றி வீடியோ வெளியிட்டதுதான் என்று குற்றம் சாட்டினார். திமுக அரசுக்கு எதிரான தனது விமர்சனங்களால் தொடர்ந்து அடக்கப்படுவதாக அவர் கூறி வருகிறார்.
கடந்த ஆண்டு பெண் போலீசார் குறித்த இழிவான கருத்துக்கு பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகின. குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். ஒவ்வொரு முறை ஜாமீன் பெற்று வெளியே வந்தாலும் புதிய வழக்குகள் போடப்படுவதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
இந்தக் கைது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை என்று விமர்சிக்கின்றனர். போலீசார் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை.
இதையும் படிங்க: நயினார் டெல்லி ட்ரிப்! ஓபிஎஸ் கூட்டம் ஒத்திவைப்பு!! அப்போ அது கன்பார்ம் தானா?!