சென்னை, டிசம்பர் 13: பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், ஆதம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 'ரெட் அண்ட் ஃபாலோ' படத்தின் தயாரிப்பாளர் புருஷோத்தமனை மிரட்டியதாக பதிவான வழக்கின் அடிப்படையில் இந்தக் கைது நடந்துள்ளது.
சவுக்கு சங்கரின் அரசியல் விமர்சனங்கள், குறிப்பாக நேற்று வெளியிட்ட சென்னை காவல்துறை ஆணையர் அருண் மீதான பினாமி முதலீடு குற்றச்சாட்டுகள், இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை, சவுக்கு சங்கர் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) கணக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, "என்னை கைது செய்ய சென்னை காவல்துறை வந்துள்ளது" என்று அறிவித்தார். அந்த வீடியோவில் அவர் கூறினார்: "சென்னை காவல்துறை என்னைக் கைது செய்ய வந்திருக்கிறார்கள். நான் இன்னும் கதவைத் திறக்கவில்லை. வழக்கறிஞர்கள் வரட்டும்" என தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்... ஜனவரியில் வேட்பாளர் தேர்வு... விஜயின் அதிரடி முடிவு...!
அவர் தனது குழுவினரும் கைது செய்யப்படலாம் என்று அச்சம் தெரிவித்தார். மேலும், நேற்று (டிசம்பர் 12) அவர் வெளியிட்ட வீடியோவில், "சென்னை காவல்துறை ஆணையர் அருண் அவர்கள், பினாமி நிறுவனங்கள் மூலம் ஏகப்பட்ட முதலீடுகளைச் செய்துள்ளார் என்ற விவரங்களை நான் வெளியிட்டதன் காரணமாகவே இப்போது கைது செய்ய வந்திருக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார்.
இந்தக் கைது, அக்டோபர் மாத இறுதியில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து வந்த சம்மனுடன் தொடர்புடையது. அந்த சம்மனில், 'ரெட் அண்ட் ஃபாலோ' படத்தின் தயாரிப்பாளர் புருஷோத்தமன் என்பவரின் புகாரின்படி, ஜூன் 30, 2025 அன்று சவுக்கு சங்கர், மாலதி உள்ளிட்ட சிலர், அவரை அடித்து, 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே தவறான வீடியோவை நீக்குவோம் என்று மிரட்டியதாகக் கூறப்பட்டது.
நானும் மாலதி மற்றும் மொத்த டீமும் கைது செய்யப்பட இருக்கிறோம். pic.twitter.com/1Vgt1xla8J
— Savukku Shankar (@SavukkuOfficial) December 13, 2025
இதற்குப் பதிலாக, சவுக்கு சங்கர் "இத்தகைய சம்பவம் நடக்கவில்லை. புருஷோத்தமன் என்பவர் என்னைச் சந்திக்கவில்லை. இதை எனது விளக்கமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறியிருந்தார். அதன் பிறகு அந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், இன்று போலீசார் வீட்டிற்கு வந்து அவரை கைது செய்தனர்.
அதே நேரத்தில், சவுக்கு மீடியா யூடியூப் சேனலில் பணியாற்றும் மாலதியும் தனது வீடியோவை வெளியிட்டு, "என்னையும் கைது செய்ய போலீசார் வந்துள்ளனர். சவுக்கு சங்கரின் ஏ.ஆர்.இல் என் பெயரும், மற்றும் 4 பேரின் பெயர்களும் உள்ளன. 20 ஏ.ஆர்.க்கள் பெண்டிங்கில் இருப்பதால், கைது செய்யப்பட்டால் 3-4 மாதங்கள் வெளியில் வர முடியாது.
Malathy’s appeal to viewers. pic.twitter.com/rbZUUNxzDp
— Savukku Shankar (@SavukkuOfficial) December 13, 2025
இன்று சனிக்கிழமை, ஐகோர்ட் விடுமுறை தினமாகப் பார்த்து கைது செய்ய வந்திருக்கிறார்கள். ஜனநாயகத்திற்காக நின்றிருக்கிறோம். அதற்கான பின்விளைவுகள்தான் இது. போலீசார் வந்திருக்கிறார்கள். வக்கீல் வரும்வரை பேச வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள்" என்று கூறினார்.
இந்த வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி, சமூக வலைதளங்களில் பலர் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். "அரசியல் விமர்சனத்திற்கான தண்டனை இது" என்று சிலர் விமர்சித்துள்ளனர்.
சவுக்கு சங்கருக்கு எதிராக 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றில் பல அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிரான விமர்சனங்களைத் தொடர்புபடுத்தியவை. காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை. இந்தக் கைது, தமிழகத்தில் கருத்துச் சுதந்திரத்தின் மீதான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கு... அவ்ளோ அலட்சியம்..! இது தான் சமூகநீதியா என சீமான் கண்டனம்..!