ஓய்வு பெற்ற இந்திய வீரர் மனோஜ் திவாரி, கேப்டனாக எம்.எஸ். தோனி இருந்தபோது தனக்கு வாய்ப்புகள் வழங்காதது பற்றி வெளிப்படையாகப் பேசியிருந்தார். தற்போது இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் பற்றி பேசியிருக்கிறார். அதில் சேவாக் பற்றி பெருமையாகப் பேசியிருக்கிறார் மனோஜ் திவாரி.
"வீரேந்தர் சேவாக்தான் என்னுடைய முன்மாதிரி கிரிக்கெட் வீரர். என் கடைசி மூச்சு இருக்கும் வரை நான் அவருக்குக் கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில். எனக்காக அவர் தனது இடத்தை விட்டுக்கொடுத்தார். அப்படி ஒரு வாய்ப்பை அவர் கொடுக்கவில்லை என்றால் எனது வாழ்க்கை வேறு மாதிரியாக இருந்திருக்கும். அப்போது வீரேந்தர் சேவாக், கவுதம் கம்பீர் மற்றும் நான் அப்போது நல்ல புரிதலுடன் இருந்தோம்.

நான் ஏழு ஆண்டுகளாக இந்திய அணியில் உள்ளே, வெளியே என இருந்தேன். பேட்டிங் வரிசையிலும் மேலும், கீழும் என்றுதான் இருந்தேன். எனக்கு வாய்ப்புகள் அளிக்கப்படாமல் இருப்பதைப் பார்த்த சேவாக், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் துவக்க வீரராக அனுப்பினார்.
இதையும் படிங்க: ‘சுப்மான் கில் என்ன செய்தார்?’ ‘தமிழராக இருந்தால் எப்போதோ இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்’: பத்ரிநாத் ஆவேசம்
இந்தூரில் சேவாக் இரட்டை சதம் விளாசினார். அந்தத் தொடரில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்தப் போட்டியில் நான்காவது வீரராக களமிறங்கி சதமடித்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றேன். சேவாக் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், சதமடித்த பிறகு 14 போட்டிகளில் வாய்ப்பு பெறாமல் இருந்தேன். சரியாக விளையாடாத வீரர்களுக்கு தோனி வாய்ப்பளித்தார். ஆனால், எனக்கு அவர் வாய்ப்பளிக்கவில்லை" என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

2011இல் வெஸ்ட்இண்டீஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. ஒரு நாள் தொடருக்கு கேப்டன் எம்.எஸ். தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. எனவே, கேப்டனாக வீரேந்திர சேவாக் நியமிக்கப்பட்டார். இதில் இந்தூர் போட்டியில் சேவாக் இரட்டை சதம் விளாசினார். சென்னையில் நடைபெற்ற போட்டியில் சேவாக் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக கேப்டனாக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். இந்தப் போட்டியில்தான் தன் இடத்தை தனக்கு சேவாக் விட்டுக் கொடுத்தார் என்று மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘என்னையா ஓய்வெடுக்கச் சொல்றீங்க..?’ மோசமான ஃபார்மிலும் வீராப்பு காட்டும் விராட் கோலி..!