ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு ஆண்கள் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்தது. பதிலுக்கு விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா தங்கப்பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும், அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். 28 பந்துகளை சந்தித்த அவர் 7 சிக்ஸர்கள் உட்பட 61 ரன்கள் விளாசினார். அவரது அதிரடி ஆட்டம் இந்தியாவின் ரன் வேகத்தை அதிகரித்தது.
மறுபுறம் திலக் வர்மா கடைசி வரை களத்தில் நின்று சிறப்பாக விளையாடினார். 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்த அவர், இறுதி ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோரை 200 ரன்களை கடக்கச் செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணிக்கு 212 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 45 ரன்னில் சுருண்ட இலங்கை! இந்தியாவின் அசத்தல் வெற்றி! பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதல்!

இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 39 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்ததால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. எனினும் ஹசன் நவாஸ் அதிரடியாக விளையாடி 96 ரன்கள் குவித்து பாகிஸ்தானை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்தார். சயீம் அயூப் 29 ரன்கள் எடுத்தார். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசி கட்டத்தில் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு பாகிஸ்தானின் ரன் வேகத்தை தடுத்து நிறுத்தினர்.
இந்திய அணியில் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில் பாகிஸ்தான் 192 ரன்களில் முடிவுக்கு வந்தது. இதனால் இந்தியா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. பாகிஸ்தான் வெள்ளிப்பதக்கத்துடன் திரும்பியது. ஆசிய விளையாட்டில் ஆண்கள் கிரிக்கெட்டில் இந்தியா மீண்டும் தங்கம் வென்றிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆசிய விளையாட்டில் வெண்கலம்! ஜோஷ்னா சின்னப்பாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை! முதல்வர் விஜய் அறிவிப்பு!