காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் இதில் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தியா மீது மீண்டும் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன.

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்திய விமானப் படை பதிலடியை கொடுத்துள்ளது. நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது. பாகிஸ்தான் 50க்கும் மேற்பட்ட டிரோன்களை பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் மேற்கொண்டது. இந்த டிரோன் தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது.
50க்கும் மேற்பட்ட டிரோன்கள் அழிக்கப்பட்டன. இந்த பதற்றமான சூழல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு பின் சூழல் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், அதன்பின் மத்திய அரசு, ஐபிஎல் உரிமையாளர்கள், பங்குதாரர்கள், ஸ்பான்சர்கள், ஒளிபரப்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: இந்தியா- பாக் பதற்றம்..! ஐபிஎல் 2025 போட்டிகளை மொத்தமாக நிறுத்திய பிசிசிஐ..!

மேலும் அப்போது சூழல் சாதகமாக இருக்கும் பட்சத்தில், புதிய அட்டவணை மற்றும் மைதானங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு பின் ஐபிஎல் தொடர் தொடங்கினாலும், பல்வேறு சிக்கல்கள் உருவாகும் என்று கிரிக்கெட் வல்லூநர்கள் கூறுகின்றனர். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 7 முதல் 8 வெளிநாட்டு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், அந்தந்த வீரர்கள் தொடர்புடைய கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐ நிர்வாகத்திடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை அனுப்பி வைக்க கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் இன்று இரவு வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் தங்களின் சொந்த நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று புறப்பட்ட பின், ஒரு வாரத்திற்குள் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கப்படவில்லை என்றால், பின்னர் இந்தியாவில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிய வந்துள்ளது. அடுத்தடுத்து தேசிய அணிக்கான சுற்றுப்பயணத்தில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் ஆர்சிபி, மும்பை, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் ஐபிஎல் தொடரை இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே துபாயில் பிஎஸ்எல் தொடர் நடத்த திட்டமிட்டிருப்பதால், தென்னாப்பிரிக்காவில் நடத்த வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அப்போ மழை; இப்போ தொழில்நுட்ப கோளாறு... கைவிடப்பட்ட பஞ்சாப் vs டெல்லி இடையேயான போட்டி!!