2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. மொத்தம் 70 லீக் போட்டிகளில் 51 போட்டிகள் முடிவடைந்து உள்ள நிலையில், டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேற உள்ளது. லீக் சுற்றின் 52வது போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 8 தோல்வி என வெறும் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் நடப்பு சீசன் ஐபிஎல் போட்டியில் இருந்து சென்னை அணி வெளியேறிவிட்டது. பெங்களூர் அணி 10 போட்டிகளில் 3 தோல்வி, 7 வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் சென்னை அணியை கிண்டல் செய்யும் வகையில் பெங்களூரில் டீசர்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் போட்டியில் தடை விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இலக்கை எட்ட தடுமாறிய SRH... பேட்டிங், பீல்டிங் என இரண்டிலும் கலக்கிய GT வெற்றி!!

சென்னை அணி நிர்வாகம் மீதான ஸ்பாட் ஸ்பிக்சிங் புகாரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை குறிப்பிடும் வகையில் கருப்பு, வெள்ளை நிறத்தில் ஜெயில் உடை போல டீசர்ட் தயாரித்து ஆர்சிபி ரசிகர்கள் பெங்களூரில் விற்பனை செய்து வருகின்றனர். அதில் 2016-2017 என்று எழுதப்பட்டுள்ளது. இதனை வாங்கி பலரும் அணிந்து செல்கின்றனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை, பெங்களூர் அணி ரசிகர்கள் இடையே தொடக்கம் முதலே மோதல் இருந்து வருகிறது.

இதுவரை 17 சீசன்களாக ஐபிஎல் போட்டி நடந்தாலும் கூட ஒரு முறை கூட பெங்களூர் அணி சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. இதனை சொல்லி சென்னை ரசிகர்கள், ஆர்சிபி ரசிகர்களை கிண்டல் செய்து வருகின்றனர். குறிப்பாக ‛லாலிபாப்' என்று சொல்லி கிண்டல் செய்கின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் சென்னை அணி தடை செய்யப்பட்ட ஆண்டை டீசர்ட்டில் குறிப்பிட்டு பெங்களூரில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது சென்னை ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.
இதையும் படிங்க: சச்சின் டெண்டுல்கரையே ஓரம் கட்டிய சாய் சுதர்சன்... டி20 கிரிக்கெட்டில் தரமான சம்பவம்!!