இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 23-ம் தேதி இரவு நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கை அணித்தலைவர் சமரி அதாபத்து 31 ரன்களும், ஹர்ஷிதா சமரவிக்ரமா 33 ரன்களும் எடுத்து சற்று தாக்குப்பிடித்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இலங்கை அணியை கட்டுப்படுத்தினர். ஸ்ரீ சரணி மற்றும் வைஷ்ணவி ஷர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையும் படிங்க: பெங்களூரு: விஜய் அசாரே போட்டிகள் திடீர் ரத்து..!! ஏன் தெரியுமா..?? ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!!

இதையடுத்து 129 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா புயலாக வீசினார். வெறும் 34 பந்துகளில் 11 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்து ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் குவித்தார். அவருக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் 26 ரன்கள் சேர்த்து உதவினார்.
இறுதியில் இந்திய மகளிர் அணி 11.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 129 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகியாக ஷபாலி வர்மா தேர்வு செய்யப்பட்டார். அவரது அதிரடி ஆட்டம் இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அடுத்த போட்டி டிசம்பர் 26-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இந்திய மகளிர் அணியின் தொடர் ஆதிக்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு..!! குஷியில் கிரிக்கெட் வீராங்கனைகள்..!! காரணம் இதுதான்..!!