உலகப் புகழ்பெற்ற ‘டைம்’ இதழின் 2026ஆம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்க 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இடம்பெற்றுள்ளார். 29 வயதான மந்தனா, இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
மும்பையைப் பூர்வீகமாகக் கொண்ட மந்தனா, இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முகமாக திகழ்கிறார். உள்ளூர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை, மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் 17 சதங்கள் அடித்து சாதனை படைத்தவர், ஒரு நாளில் 1,000க்கும் மேற்பட்ட ஒருநாள் சர்வதேச ரன்களை குவித்த முதல் வீராங்கனை என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
குறிப்பாக, 2024 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டனாக செயல்பட்டு மகளிர் பிரீமியர் லீக் (WPL) பட்டத்தை வென்று அசத்தினார். இந்தியா 2024ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது துணை கேப்டனாக செயல்பட்ட மந்தனா, அந்த தொடரில் இரண்டாவது அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாகவும் திகழ்ந்தார். 2025ஆம் ஆண்டில் பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படிங்க: இந்தியா - ஆப்கன் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சொதப்பல்! மழை குறுக்கிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம்!!

டைம் இதழின் இந்த வருடாந்திர பட்டியல் உலக அளவில் விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நட்சத்திரங்களை அங்கீகரிக்கிறது. இதில் கூடைப்பந்து ஜாம்பவான் லெப்ரான் ஜேம்ஸ், கால்பந்து சூப்பர் ஸ்டார்கள் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, டென்னிஸ் நட்சத்திரம் கார்லோஸ் அல்காரஸ், கோல்ப் வீரர் ரோரி மெக்ல்ராய் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்மிருதி மந்தனாவின் இந்த சாதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தாலும், தலைமைத்துவத்தாலும் உலக அரங்கில் இந்தியாவின் பெயரை உயர்த்திய மந்தனா, இளம் பெண்களுக்கு பெரும் உத்வேகமாக திகழ்கிறார்.
இந்த அங்கீகாரம் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மிருதி மந்தனாவின் பயணம் இன்னும் பல சாதனைகளை நோக்கி தொடரும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தல எம்.எஸ். தோனிக்கு இந்திய கிரிக்கெட் அணியில் பதவி?! BCCI-யின் மாஸ்டர் பிளான்!! ரசிகர்கள் உற்சாகம்!