மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள நந்திகிராம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, அவரது அணியின் வேட்பாளர் சஞ்சிதா பிரதான் திடீரென மனுவைத் திரும்பப் பெற்ற பின்னர் வந்துள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தல், அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சுவேந்து அதிகாரி நந்திகிராம் மற்றும் பவானிபூர் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
அவர் பவானிபூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டதால் நந்திகிராம் தொகுதி காலியானது. இதனால் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான அணி சஞ்சிதா பிரதானை வேட்பாளராக அறிவித்திருந்தது. ஆனால் அவர் முதலமைச்சர் சுவேந்து அதிகாரியைச் சந்தித்த பின்னர் தனது வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றார். இதனால் மம்தா அணியிடம் அந்தத் தொகுதியில் வேட்பாளர் இல்லாத நிலை ஏற்பட்டது.இந்தப் பின்னணியில் கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்குத் தனது அணி ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார். “நாட்டின் பெரும் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

இந்தியா கூட்டணியை வலுப்படுத்த வேண்டும். பாஜகவை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். அசாம் மாநிலத்தில் நடைபெறும் நகான் மக்களவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். ரெஜினகர் தொகுதியில் என்ன செய்வது என்பதைப் பின்னர் முடிவு செய்வதாகக் கூறினார்.தேர்தல் ஆணையம் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் முடக்கியதைத் தொடர்ந்து இரு பிரிவுகளுக்கும் புதிய பெயர்களும் சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மம்தா தலைமையிலான அணிக்கு ‘மம்தா அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரும் ‘கால்பந்து வீரர்’ சின்னமும் வழங்கப்பட்டன. இதை மம்தா கடுமையாக விமர்சித்தார். “இது ஜனநாயகத்திற்குக் கருப்பு நாள். ஒரு கட்சியின் அகங்காரத்தைத் திருப்திப்படுத்த அனைத்தும் நடந்திருக்கின்றன. 28 ஆண்டுகளாக எங்களுடன் இருந்த சின்னத்தை எப்படி முடக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். தனது கட்சியை பாஜக கடத்திச் சென்றுவிட்டதாகவும், இது சட்டவிரோதமான நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!
நந்திகிராம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மிலான் பிரதான் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் ஹசிரானி ரத் வேட்பாளராக உள்ளார். சிபிஐ வேட்பாளரும் களத்தில் இருக்கிறார். மம்தா அணியின் வேட்பாளர் விலகியதால், எதிர்ப்பு வாக்குகள் காங்கிரஸ் வேட்பாளருக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்த முடிவு இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதாக மம்தா வலியுறுத்தினாலும், கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு மற்றும் சின்ன இழப்பு ஆகியவை பெரும் சவாலாக உள்ளன.
இதையும் படிங்க: ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!