ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதக் களங்கமுமின்றி தூய்மையாகப் பணியாற்றி வந்த தன் மீது, எவ்வித முறையான விசாரணையும் நடத்தப்படாமல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்ட போலிப் புகைப்படங்களின் அடிப்படையில் தன்னிச்சையாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துப் பொறுப்பிலிருந்து விடுவித்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாஜகவின் மூத்த தலைவர் கருப்பு முருகானந்தம் கட்சித் தலைமை மீது போர்க்கொடி தூக்கியுள்ளார்.
தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கருப்பு முருகானந்தம், கட்சியிலிருந்து திடீரெனப் பொறுப்பு நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை குறித்துத் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் மிகக் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து கட்சித் தலைமைக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தொடங்கிய எனது இந்த நெடிய பொதுவாழ்வுப் பயணம், பாரதிய ஜனதா கட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதப் புகாருமின்றி மிகுந்த தூய்மையோடும் அர்ப்பணிப்போடும் தொடர்ந்த ஒன்றாகும். இத்தகைய சூழலில், முற்றிலும் பொய்யான மற்றும் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மூலமாக எவ்வித அடிப்படை விசாரணையையும் நடத்தாமல், என்னை உடனடியாகக் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவித்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெண் நிர்வாகியின் பாலியல் புகார்! பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்! நயினார் நாகேந்திரன் அதிரடி..!
மேலும் கட்சியின் தேசியத் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனையைச் சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பாக பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் ஜி அவர்களிடமும், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஜி அவர்களிடமும் நான் ஏற்கனவே நேரில் விளக்கியுள்ளேன். ஒழுங்கு நடவடிக்கைக் குழு முழுமையாக விசாரித்து முடித்த பிறகே உரிய முடிவு எடுக்கப்படும் என்று மேலிடத் தலைவர்களால் எனக்குத் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
ஆனால், எந்தவித விசாரணையையும் முறையாக நடத்தாமல், தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மூலம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படங்கள் மற்றும் யாரோ புனைந்த போலிப் புகார் மனுவை மட்டுமே கண்மூடித்தனமாக அடிப்படையாகக் கொண்டு என் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் இத்தகைய போலிச் செய்திகளையும் விஷமத்தனமான வதந்திகளையும் பரப்பி வருவோர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: "ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும்"..! மிரட்டிய நபர்களை தீர விசாரிக்கனும்..! நயினார் வலியுறுத்தல்..!