ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை செப்டம்பர் 2026-இல் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளூம்பெர்க் நிருபர் மார்க் குர்மன் தகவலின்படி, இந்த புதிய சாதனம் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘ஆப்பிள் அப்கிரேட்’ திட்டத்தின் கீழ் ஆதரிக்கப்படும் முதல் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாக இருக்கும். கிளார்னா நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்படும் இந்த குத்தகை திட்டம், வாடிக்கையாளர்களை முழு தொகையையும் ஒரே முறை செலுத்தாமல் மாதந்தோறும் பணம் செலுத்தி சாதனத்தைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
குத்தகை காலத்தின் முடிவில், பயனர்கள் புதிய மாடலுக்கு மேம்படுத்தலாம், சாதனத்தைத் திருப்பித் தரலாம் அல்லது மீதமுள்ள தொகையை செலுத்தி அதை தங்களிடமே வைத்துக்கொள்ளலாம். ஆப்பிள் வாடிக்கையாளர் அனுபவத்தை நிர்வகிக்க, கிளார்னா நிதியுதவியை கையாள்கிறது.
இதற்கு முன்பு ஆப்பிள் தனக்குள்ளேயே வன்பொருள் சந்தா சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால் செயல்படுத்தல் சவால்கள் மற்றும் ஒழுங்குமுறை கவலைகள் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டு, இப்போது கிளார்னாவுடன் குத்தகை மாதிரியைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இதையும் படிங்க: 11% வரை உயர்வாம்..!! எகிறிய ஐபோன்களின் விலை..!! அதிரடி காட்டும் ஆப்பிள்..!!

மடிக்கக்கூடிய ஐபோன் விலை சுமார் 2,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,90,000) அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் அப்கிரேட் மூலம் வாடிக்கையாளர்கள் இதை மாதத்திற்கு சுமார் 60 முதல் 70 டாலர்கள் வரை குத்தகைக்கு எடுக்க முடியும் என்று குர்மன் கூறுகிறார். இந்த திட்டம் அதிக விலை கொண்ட சாதனங்களை வாங்குவதற்கான தடையை குறைக்கும் என நம்பப்படுகிறது.
இதற்கிடையில், ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் விலையும் உயர வாய்ப்புள்ளது. தற்போதைய ஐபோன் 17 ப்ரோ மாடல் இந்தியாவில் ரூ. 1,34,999 மற்றும் ப்ரோ மேக்ஸ் ரூ.1,49,900-இல் விற்பனையாகிறது. அடுத்த தலைமுறை மாடல்களின் விலை அமெரிக்காவில் 200 டாலர்கள் வரை அதிகரிக்கலாம் என்றும், இந்தியாவில் ரூ. 20,000 முதல் 30,000 வரை உயரலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதிரிபாகங்கள் மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணம். மடிக்கக்கூடிய ஐபோன் புத்தக வடிவமைப்பில் வரும் எனவும், 7.8 அங்குல உள் திரையும் 5.5 அங்குல வெளிப்புற திரையும் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த புதிய சாதனம் ஆப்பிளின் வருமானத்தை உயர்த்தவும், போட்டியாளர்களுடன் போட்டியிடவும் உதவும் என தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: அடடே.. சூப்பர் OFFERS..!! மேக்புக் மாடல்களுக்கு அள்ளி வழங்கும் ஆப்பிள்..!!