சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிரிவு, புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டீசர்களை வெளியிட்டு, அவற்றை ‘மேக்ஸ்’ என்ற பெயரில் குறிப்பிட்டு வந்தது. இப்போது அந்த சாதனத்தின் முழுப் பெயர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் என அழைக்கப்படும் இந்த மாடல், ரெட்மி வரலாற்றில் முதன்முறையாக 10,000mAh பேட்டரியைக் கொண்டு வருகிறது.
ஏற்கனவே சில சர்வதேச சந்தைகளில் அறிமுகமான இந்த போன், இந்தியாவிலும் விரைவில் வரவுள்ளது.ரெட்மி இந்தியா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பகிர்ந்த டீசரில், புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் 10,000mAh பேட்டரியுடன் வருவதாக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் ‘மேக்ஸ்’ பிரான்டிங் கொண்ட இந்த மாடல், இந்திய சந்தையில் செப்டம்பர் 15 அன்று அறிமுகமாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகிய இரு மாடல்களும் இந்தத் தொடரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஆப்பிளின் புதிய ஐபோன் தொடர் வெளியீட்டோடு ஒரே காலத்தில் வருவதால், நடுத்தர வகை ஸ்மார்ட்போன் சந்தையில் கடும் போட்டி ஏற்படும். எதிர்பார்க்கப்படும் அம்சங்களைப் பார்த்தால், ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 6.83 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், HDR10+ மற்றும் டால்பி விஷன் ஆதரவு ஆகியவை இதில் அடங்கும். கார்னிங் கோரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்புடன், IP68 மற்றும் IP69K தரச்சான்றுகளும் வழங்கப்படும்.
இதையும் படிங்க: 200MP கேமராவுடன் களமிறங்கிய சியோமி ஃபோல்டபிள் போன்.. 6000mAh பேட்டரி சிறப்பு..!!

செயலிப்பகுதியில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 பிராசஸர் இடம்பெறும். அதிகபட்சம் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பு வசதி (UFS 4.1) கிடைக்கும். ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3 இயங்குதளத்துடன், பல ஆண்டுகளுக்கு மென்பொருள் ஆதரவு உறுதியளிக்கப்பட்டுள்ளது. பேட்டரி தான் இதன் முக்கிய ஈர்ப்பு. 10,000mAh சிலிகான்-கார்பன் பேட்டரி, 100 வாட் ஹைப்பர்சார்ஜ் மற்றும் 27 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. ஒரு முழு சார்ஜில் மூன்று நாட்கள் வரை பயன்பாடு சாத்தியம் என நிறுவனம் கூறுகிறது.
கேமரா அமைப்பில் 50எம்பி முதன்மை சென்சார் (OIS உடன்), 8எம்பி அல்ட்ரா வைடு மற்றும் 32எம்பி செல்ஃபி கேமரா இடம்பெறும். முந்தைய நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் 200எம்பி கேமரா இருந்த நிலையில், இங்கு தரம் மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.கருப்பு, பர்பிள், கிளவுட் பிளஷ் (சூரிய ஒளியில் நிறம் மாறும்) உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கும் இந்த போன், சுமார் 229.5 கிராம் எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் முந்தைய மாடல்களை விட சற்று உயர்ந்த விலையில் வரக்கூடும் என கணிக்கப்படுகிறது. பேட்டரி ஆயுளை முன்னிறுத்தி வரும் இந்த ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ், நீண்ட நேரம் பயன்படுத்த விரும்பும் பயனர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
இதையும் படிங்க: மிவி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன்.. மிவி ஒன் 5ஜி விரைவில் இந்திய சந்தையில்!!