தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நான்கு நாட்கள் ஓய்வு பெறுகிறது. ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அவைக் கூட்டம் நடைபெறாது. அதனைத் தொடர்ந்து 15ஆம் தேதி சுதந்திர தின அரசு விடுமுறை. 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றும் விடுமுறை. இதனால் ஆகஸ்ட் 13 முதல் 16 வரை தொடர்ந்து நான்கு நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் அமர்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2026-27 நிதியாண்டுக்கான திருத்திய பொது நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். அடுத்த நாள் (6ஆம் தேதி) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை சமர்ப்பித்தார். இது தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசின் முதல் முழுமையான பட்ஜெட் அமர்வாகும்.

ஆகஸ்ட் 7, 10 மற்றும் 11 ஆகிய மூன்று நாட்களில் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விரிவான விவாதம் நடைபெற்றது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல முக்கியப் பிரச்சினைகளை எழுப்பினர். அமைச்சர்கள் அவற்றுக்கு விளக்கங்கள் அளித்தனர். இன்று (12ஆம் தேதி) நிதி அமைச்சர் மரிய வில்சனும் வேளாண் அமைச்சர் வினோத்தும் விவாதத்திற்கு விரிவான பதிலுரை அளித்தனர். அதன்பிறகு அன்றைய கூட்டம் நிறைவடைந்தது.
இதையும் படிங்க: சட்டசபையில் முதலமைச்சர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்.. சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு!
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தபடி, இந்த கூட்டத்தொடர் செப்டம்பர் 8 வரை தொடரும். மானியக் கோரிக்கைகள் மீதான துறைவாரியான விவாதங்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதி திங்கட்கிழமை முதல் தொடங்கும். முதல் நாளில் வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, இயற்கை சீற்றங்கள் தொடர்பான துயர் தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகியவை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட உள்ளன. இதன்பிறகு பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இதையும் படிங்க: அமைச்சரவையில் மரிய வில்சனுக்கு இடமா? பரபரப்பை கிளப்பிய சவுக்கு சங்கர்..!!