தமிழக அரசியல் களத்தில் 2025 நவம்பர் மாதம் ஒரு முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்வு, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், நடிகரும் அரசியல்வாதியுமான விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் இருந்து, எம்ஜிஆர் முதல் ஜெயலலிதா வரையிலான தலைவர்களின் நம்பிக்கைக்குரியவராக விளங்கிய செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு இந்த மாற்றத்தை மேற்கொண்டார். இது தவெகவுக்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
செங்கோட்டையனின் அரசியல் பயணம் எம்ஜிஆர் காலத்திலிருந்தே தொடங்கியது. 1977-ல் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஒன்பது முறை எம்எல்ஏவாக வென்றவர். ஜெயலலிதா ஆட்சிகளில் பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அதிமுகவில் அமைப்புரீதியாக வலுவான தலைவராகவும், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்கவராகவும் இருந்தார். ஆனால், கட்சியின் பிளவுகளை சரிசெய்ய வலியுறுத்தியதால் எடப்பாடி பழனிச்சாமியுடன் மோதல் ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதற்காக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.நவம்பர் 27 அன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் கட்சியில் இணைந்தார். அவருடன் முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்ட பல ஆதரவாளர்களும் இணைந்தனர். விஜய் அவரை வரவேற்று, "ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவமும் புலப்பணியும் தவெகவுக்கு பெரும் பலம்" என்று கூறினார். செங்கோட்டையனுக்கு கட்சியின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: தவெகவில் இணையும் செங்கோட்டையன் ஆதரவு MLA? சட்டென கொடுத்த ரியாக்ஷன்..!
தமிழ்நாட்டின் எதிர்காலம் விஜய் என்பதை அறிந்தவர் செங்கோட்டையன் என தமிழக வெற்றி கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். அண்ணன் செங்கோட்டையன் நினைத்திருந்தால், பாஜகவுக்கு சென்று கவர்னராகவோ மத்திய அமைச்சராகவோ ஆகியிருக்கலாம் என்றும் திமுகவுக்கு போயி நாளைக்கே அமைச்சராகியிருக்கலாம் எனவும் தெரிவித்தார். ஏன் தவெகவில் சேர்ந்தார் என்று கேட்ட அவர், நம்ம தலைவர் தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் என புரிந்துகொண்டதால் இங்கு வந்தார் என்று கூறினார்.
இதையும் படிங்க: பொங்கலுக்கு பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும்... விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த செங்கோட்டையன்...!