தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், அதிமுக-வின் மிக முக்கியமான மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை 3:30 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமைக் கழகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் தொடங்கியது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் மிக முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
வரும் ஏப்ரல் மாதம் காலியாகும் மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து இந்தக் கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதிமுக தரப்பிற்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ள இரண்டு இடங்களில், தற்போதைய எம்.பி. முனைவர் மு. தம்பிதுரை-க்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

அதிமுக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கீடு செய்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: ஈரோட்டில் இ.பி.எஸ் சூறாவளி பிரச்சாரம்! மார்ச் 7-ல் அந்தியூர், மார்ச் 8-ல் பெருந்துறை, பவானியில் பரப்புரை!
ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி பணிகள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பிய பிறகு நடைபெறும் முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இது என்பதால், பாஜக உடனானத் தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி உறுதிப்பாடு குறித்து இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். கூட்டத்தின் முடிவில் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் பிரச்சாரப் பயணத் திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.
இதையும் படிங்க: அமித் ஷாவுடன் 'மெகா' டீல்... டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் எடப்பாடி பழனிசாமி!