சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. அரசியல் கட்சிகளின் பிரசாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தீவிரமாக மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் நிதின் நட்டா, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவீஸ், ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா உள்ளிட்டோர் தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியின் முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதரவாக தமிழகம் வருகிறார்.
ஏப்ரல் 20ஆம் தேதி சென்னை வரும் கேஜரிவால், இரண்டு நாட்கள் இங்கு முகாமிட்டிருந்து, தி.மு.க.வுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் ஆதரவாக பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதையும் படிங்க: பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு!! காத்திருக்கும் ட்விஸ்ட்!! கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம்பெறுமா?

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த தி.மு.க.வுக்கு ஆதரவாக கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த வருகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஜரிவாலின் வருகை தி.மு.க.வுக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பல மாநில தலைவர்கள் தமிழகத்தில் பிரசாரம் செய்து வரும் நிலையில், கேஜரிவாலின் பிரசாரம் கூட்டணி கட்சிகளிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த கட்டத்தில், அனைத்து கட்சிகளும் தங்களது வாக்குறுதிகளையும் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து வருகின்றன.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்யப்படும் என்று தெரிகிறது. கேஜரிவால் தமிழக மக்களிடையே தனது பிரசாரத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெறுவார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், இந்த வருகை தமிழக அரசியல் களத்தில் புதிய எதிரொலியை ஏற்படுத்தும் என்பது உறுதி.
இதையும் படிங்க: மகளிர் ஓட்டுக்கு குறி!! மாற்றி யோசிக்கும் திமுக! 25 பெண் வேட்பாளர்ககளை களமிறக்க திட்டம்!