தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக 1 லிட்டர் அளவுள்ள குடிநீர் பாட்டில்களை தயாரித்து விநியோகம் செய்யும் உரிமையை அளிக்கும் இணையவழி டெண்டரை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) கோரியுள்ளது. இந்த டெண்டர், நீண்ட தூர பேருந்து சேவைகளில் பயணிகளுக்கு சுத்தமான குடிநீரை எளிதாக வாங்க உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்கள் மற்றும் தனியார் சொகுசுப் பேருந்துகளில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்குக் கிடைப்பது போல மாநில அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் இயக்கும் பேருந்துகளில் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. விரைவு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, பேருந்து பயணத்தின் போது குடிநீர் தேவைப்பட்டால் பயணிகளுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை கொண்டு வர அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் மையம்.. டெண்டர் கோரியது டிட்கோ..!!
இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 1 லிட்டர் குடிநீர் பாட்டில்களை தயாரித்து விநியோகம் செய்வதற்கான இணையவழி டெண்டர் கோரப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆன்லைன் இ-டெண்டர் மூலம் விண்ணப்பங்களை அரசு விரைவு போக்குவரத்து கழகம் கோரியுள்ளது.
டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு, இந்த திட்டம் அமல்படுத்தப்படும் தொடர்பான விரிவான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமக்காலம், விண்ணப்பிக்கும் முறை, செலுத்த வேண்டிய முன்வைப்புத்தொகையை இணையம் மூலம் அறியலாம். மேலும் ஒப்பந்தப்புள்ளி தொடர்பான விவரங்களை www.tntenders.gov.in என்ற இணைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இந்தத் திட்டம், கோவிட் பிறகு பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கிய அம்சமாக அமையும். இந்த SETC அரசு நிறுவனம், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 8 பிரிவுகளாக இயங்குகிறது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளாவுக்கும் சேவை செய்கிறது. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.

பேருந்துகளில் ஏசி, டீவி, சார்ஜிங் போன்ற வசதிகளுடன் இப்போது குடிநீரும் சேர்கிறது. பயணிகள் இதை வரவேற்றுள்ளனர். "நீண்ட பயணங்களில் தரமான நீர் கிடைப்பது சிறப்பு" என சிலர் கூறினர். இத்திட்டத்தால், SETCயின் வருவாயும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் இந்த டெண்டர், பயணிகளின் வசதி மற்றும் சுற்றுச்சூழல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திருமண உதவித் திட்டங்கள்: ரூ.45 கோடியில் 5,460 தங்க நாணயங்கள் - தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!