பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று திறந்து வைக்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில், கட்சித் தலைவர் ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து இருந்து வருகிறார்.
இந்த நிலையில், பெரம்பூரில் ஏற்கனவே இயங்கி வந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டு, இன்று மீண்டும் திறந்து வைக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: வெறும் வாயிலயே வடை சுடாதீங்க விஜய்..! பெண்கள் பாதுகாப்பில் கவனம் வேணும்... திமுக காட்டம்..!
பெரம்பூர் சர்மா நகர் முதல் தெருவில் அமைந்துள்ள அலுவலகம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்திற்கு எதிரே உள்ள சுவரில், தற்போதைய அரசின் முக்கிய நலத்திட்டங்களான சிங்கப்பெண்கள் திட்டம், 100 முதல் 200 யூனிட் வரை இலவச மின்சாரம், போதையில்லா தமிழகம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதனுடன், முதலமைச்சர் ஜோசப் விஜயின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் நேரடியாகக் காணும் வகையில், அப்பகுதியில் 10 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அதிக அளவில் திரள வாய்ப்புள்ளதால், சர்மா நகர் பகுதி முழுவதும் சாலைகளின் இருபுறங்களிலும் பேரிகேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவையற்ற வாகனங்கள் அப்பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
தற்போது, மாவட்ட ஆட்சியரும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நேரில் ஆய்வு செய்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு ஏற்கனவே நன்றி தெரிவிக்கச் சென்றிருந்த ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதிக்கு இன்னும் வரவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தன. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக முதலமைச்சராகவும் ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதிக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்ட பிறகு, பெரம்பூர் தொகுதி மக்களுக்காக பிரத்யேகமாக ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, அவற்றை ஆன்லைன் மூலம் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில், இரண்டு பணியாளர்களுடன் தனி இ-சேவை மையமும் இந்த அலுவலகத்தில் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக திறப்பு விழாவைத் தொடர்ந்து, சர்மா நகர் இரண்டாவது தெருவில் உள்ள நியாயவிலை கடைக்குச் செல்லும் முதலமைச்சர், புதிதாக ரேஷன் அட்டை பெற்ற பயனாளிகளுக்கு ரேஷன் அட்டைகளை வழங்க உள்ளார். பின்னர், அருகில் உள்ள மாநகரப் போக்குவரத்து மையத்தையும் ஆய்வு செய்ய உள்ளார்.
மதியம் 3 மணியளவில் முதலமைச்சர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளதால், காலையிலிருந்தே பேரிகேடுகள் அமைத்தல், எல்இடி திரைகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி பணியாளர்கள், மின்சாரத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பகுதி முழுவதும் மாநகராட்சி ஊழியர்களால் சுத்தம் செய்யப்பட்டு, நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அனுமதி இல்லாத நபர்கள் உள்ளே நுழையாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜோசப் விஜயை காண்பதற்காக பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதைப் போலவே, முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் அவர் செல்லும் இடங்களில் பொதுமக்கள் அதிகமாகக் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பெரம்பூர் தொகுதிக்கு வெற்றி பெற்ற பிறகு முதல்முறையாக அவர் வருவதால், பெரும் மக்கள் திரள் கூடும் என கருதி, விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கரூர் விஷயத்தில் ஜெட் மாதிரி இருந்த சிஎம்..! காலி பணியிடங்களையும் நிரப்பி விடுங்க... பட்டியலிட்ட நயினார்..!