தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திய விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரம் அரசியல் அலையாக மாறி வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன் தனது தேர்தல் அறிக்கையில் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு குறு விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாகவும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ஐம்பது சதவீதம் தள்ளுபடி செய்வதாகவும் வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நம்பி பல விவசாயிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் ஆட்சி அமைந்த பிறகு வெளியான அறிவிப்பு அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழு தள்ளுபடியும், சிறு விவசாயிகளுக்கு அரைவாசி தள்ளுபடியும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு படிப்படியாக குறைந்த தொகை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அதை திருத்தி எழுபத்தைந்தாயிரம் ரூபாய் வரை முழு தள்ளுபடி என விரிவுபடுத்தப்பட்டாலும், தேர்தல் வாக்குறுதியில் சொன்ன முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்தது.

பல விவசாய சங்கங்கள் இதை ஏமாற்று வேலை என்று கண்டித்தன. சிறு குறு விவசாயிகள் கூட அதிக தொகை கடன் வாங்கியிருக்கும் நிலையில், வரம்புக்குட்பட்ட தள்ளுபடி அவர்களுக்கு போதிய பயன் அளிக்காது என வாதிட்டனர்.இந்தப் பின்னணியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி முன்னின்று போராட்டங்களை முன்னெடுத்தார். அவர் தலைமையில் நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்று முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க முயன்றனர். முழுமையான கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: வெற்று வாக்குறுதிகள்... நடுரோட்டில் விவசாயிகள்..! பிரச்சனைகளை அடுக்கிய வேல்முருகன்..!
பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. விவசாயிகள் அரசின் நடவடிக்கையை துரோகம் என்று வர்ணித்தனர். தேர்தல் வாக்குறுதியை மறந்து விவசாயிகளை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டினர்.இப்போது மாநிலத்தில் சில சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அதிருப்தி அரசியல் நடவடிக்கையாக உருவெடுக்கிறது. தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுசாமி, வாக்குறுதிப்படி முழுமையாக கடன் தள்ளுபடி செய்யாததால் வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெகவுக்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல் செயல்பட்ட அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும், விவசாயிகள் தங்களது வாக்கை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த அறிவிப்பு விவசாய வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உரிமைக்காக போராடிய விவசாயிகள் கைது! தவெக அரசை கண்டித்து கனிமொழி எம்.பி ஆவேசம்!