தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கி, 8ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்தத் தொடரில் வேளாண் பட்ஜெட் தாக்கல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடந்த நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வார விடுமுறைக்குப் பிறகு இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன், மகளிர் உரிமைத் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. அத்துடன் 2027 பொங்கலுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி-சேலை குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விவாதங்களின் போது முதலமைச்சர் விஜய் தனது பிரத்யேக இருக்கையைத் தவிர்த்து, அமைச்சர்களுடன் அமர்ந்து சபை நடவடிக்கைகளைக் கவனித்தார். நீர்வளத் துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் இருக்கையில் அமர்ந்த அவர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் உரையாடிக் கொண்டே விவாதத்தைக் கண்காணித்தார். இது சட்டப்பேரவையில் உள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதையும் படிங்க: ரூ.1 கோடி இழப்பீடு.. ஹைகோர்ட்டுக்கு போன ஆதவ்.. மு.க ஸ்டாலினுக்கு பறந்த நோட்டீஸ்!!

இதற்கு முன்னர் சில நாட்களுக்கு முன்பு, சிறுபான்மைத் துறை மற்றும் சமூக நீதித் துறை மானியக் கோரிக்கைகள் விவாதத்தின் போது, முதலமைச்சர் அமைச்சர் அருண்ராஜின் இருக்கையில் அமர்ந்து, அமைச்சர் செங்கோட்டையனுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். பொதுவாக முதலமைச்சருக்குத் தனியாக ஒதுக்கப்பட்ட சிறப்பு இருக்கையில் அமர்வது வழக்கம். அமைச்சர்களும் மூப்பு அடிப்படையில் அமர்வர். உறுப்பினர்கள் விவாதத்தின்போது தற்காலிகமாக இருக்கை மாற்றுவது உண்டு.
ஆனால் முதலமைச்சர் தனது இருக்கையை விட்டு, சபை முடியும் வரை அமைச்சர்களுடன் இணைந்து அமர்வது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது. இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் விவாதங்களைத் தூண்டியுள்ளது. நேற்று சபையில் நடந்த பிரச்சினை குறித்து விசாரித்தாரா அல்லது துறை சார்ந்த ஆலோசனையா என்ற கேள்விகள் எழுகின்றன.
முதலமைச்சர் எளிமையை விரும்புபவர் என அவரது கட்சியினர் கூறி வருகின்றனர். இருப்பினும், அறைக்கு அழைத்துப் பேசியிருக்கலாம் என்ற கருத்தும் உலாவுகிறது. இந்த நிகழ்வுகள் 20 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் கூட்டத்தொடரின் சுவாரஸ்யமான அம்சங்களாகப் பேசப்படுகின்றன.
இதையும் படிங்க: ஓராண்டில் மாற்றம்.. அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும்..!! ஆதவ் அர்ஜூனா உறுதி!!