திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு மனு அனுப்பியுள்ளார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை இணைத்து இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.சிறப்பு தீவிர திருத்தம் எனப்படும் எஸ்.ஐ.ஆர். நடைமுறை மூலம் தமிழகத்தில் 97,37,832 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தை மனுவில் முதன்மையாக எடுத்துக்காட்டியுள்ளார் ஸ்டாலின்.
இந்த நீக்கல் உண்மையான வாக்காளர்களின் உரிமையைப் பறிப்பதாகக் கூறிய அவர், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். எஸ்.ஐ.ஆர்.க்குப் பிந்தைய வாக்காளர் பட்டியலை எதிர்காலத் தேர்தல்களில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டு முறையில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் மனுவில் இடம்பெறச் செய்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் தனியாக முடிவெடுத்து செயல்பட்டதாகவும், பிற ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி எஸ்.ஐ.ஆர். நடைமுறையை முன்னெடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாகத் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐந்து தொகுதி இடைத்தேர்தல்! அன்பில் மகேஷ் கைதால் திமுகவுக்கு பின்னடைவு! தவெக கையில் அஸ்திரம்!
திமுக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி, ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும், எஸ்.ஐ.ஆர். நடைமுறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், பழைய வாக்காளர் பட்டியலை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குடியரசுத் தலைவருக்கு முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டதாகத் திமுக தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.100 கோடி முறைகேடு! அன்பில் மகேஷ் வழக்கில் பெருங்குடியில் அதிரடி சோதனை! ஷண்முக பிரியா வீட்டில் ரெய்டு!