சென்னை: திமுகவின் மூத்த அமைச்சரும் பொதுச்செயலாளருமான துரைமுருகன் (87) தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளார். வயது முதிர்ச்சி மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார்.
தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு உடல்நிலை விசாரித்தார்.
மருத்துவர்கள் தெரிவித்தபடி, துரைமுருகனுக்கு காது கேட்கும் திறன் குறைந்துள்ளது. உடல் பலவீனமாக இருப்பதால் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ஆளுநர் மைக் OFF? திட்டமிட்ட வேலை..! அவ்வளவும் பச்சை பொய்... அமைச்சர் ரகுபதி விளாசல்..!
இதனால், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது தொகுதியான காட்பாடியில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள முடிவு செய்துள்ளார். தேர்தல் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தற்போது வேலூர் லோக்சபா தொகுதி எம்பியாக உள்ளார். அவருக்கு காட்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு வெற்றி பெற்றால், எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதனால் வேலூர் லோக்சபா தொகுதியில் இடைத்தேர்தலை தவிர்க்கும் வகையில், கதிர் ஆனந்தின் மனைவிக்கு காட்பாடி தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று துரைமுருகன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே திமுகவில் வேலூர் மாவட்டத்தை வடக்கு மற்றும் தெற்கு என இரண்டாக பிரித்து, வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக கதிர் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனது பிறந்தநாளை (ஜனவரி 19, 2026) ஒட்டி நேற்று முதலமைச்சர் ஸ்டாலினை சென்னை வீட்டில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றார் கதிர் ஆனந்த். இது குடும்ப அரசியல் தொடர்ச்சியை வலுப்படுத்தும் நகர்வாக பார்க்கப்படுகிறது.
துரைமுருகன் அரை நூற்றாண்டுக்கும் மேலாக திமுகவில் தொடர்ந்து பணியாற்றி வருபவர். பலமுறை எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
அவரது ஓய்வு திமுகவில் புதிய தலைமுறைக்கு வழி வகுக்கும் முக்கிய மாற்றமாக அமையும். காட்பாடி தொகுதி யாருக்கு? குடும்ப அரசியல் தொடருமா? என்பது திமுகவின் அடுத்த அறிவிப்புகளில் தெரியவரும்.
இதையும் படிங்க: போக்சோ வழக்கு... சட்டம் ஒழுங்கு சீர்கேடு..! சட்டசபை வளாகத்தில் இபிஎஸ் கடும் குற்றச்சாட்டு..!