மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முக்கிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதன் தாக்கம் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இந்தியாவிலும் வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வணிக கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.203 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி சென்னை வருகை: மீனம்பாக்கம், கிண்டி 'சிவப்பு மண்டலமாக' அறிவிப்பு!
சென்னையில் 19 கிலோ எடையுள்ள ஒரு வணிக சிலிண்டரின் விலை தற்போது ரூ.2,246.50 ஆக உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு காரணமாக விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் தங்கள் கட்டணங்களை அதிகரித்துள்ளன. இந்நிலையில், எரிபொருள் விலை உயர்வை ஓரளவு கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்துள்ளது.

இந்தப் பின்னணியில், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு நிலவரத்தை மதிப்பீடு செய்யும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முக்கிய மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்ட பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பிரதமர் மோடி, நாடு முழுவதும் சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய எரிசக்தி பொருட்களின் கிடைப்பை உறுதி செய்யுமாறு அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கொள்முதலில் தற்போது வர்த்தகம் செய்யும் நாடுகளைத் தவிர, புதிய நாடுகளிடமிருந்தும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதன் மூலம் எரிசக்தி தேவைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தீவிரமாக இயங்கி வருகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம், மத்திய கிழக்குப் பதற்றத்தின் தாக்கத்தை இந்தியப் பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மீது குறைந்த அளவில் ஏற்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: பாஜக வேட்பாளர்கள் யார் யார்..?? பிரதமர் மோடியுடன் பியூஸ் கோயல் இன்று முக்கிய மீட்டிங்..!!