கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகப் புகழ்பெற்ற மகாமகத் திருவிழா எதிர்வரும் 2028-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் வேளாண்துறை அமைச்சர் வினோத் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மகாமகப் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்றும், 70 முதல் 90 லட்சம் பக்தர்கள் வரை வரக்கூடும் என்பதால் வளர்ச்சிப் பணிகளுக்குத் தோராயமாக ரூ.600 கோடி செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மகாமக விழாவை முன்னிட்டு கும்பகோணம் நகரில் உள்ள 12 சிவாலயங்கள் மற்றும் 5 வைணவ ஆலயங்கள் என மொத்தம் 17 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்குத் திட்ட மதிப்பீடு தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலை வழியாகக் கும்பகோணம் வந்து செல்வதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகள், மாநகராட்சி சார்பில் சுகாதாரப் பணிகள் மற்றும் நீர்வளத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், வெளியூர்களிலிருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கேமரா இல்லாத போன்களுக்கு தடை இல்லை..!! செல்போன் கட்டுப்பாட்டில் அமைச்சர் ரமேஷ் விளக்கம்!!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில்கள் மூலம் மட்டுமே சுமார் 40 முதல் 50 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என்பதால், கூடுதல் ரயில்களை இயக்குவதுடன் தஞ்சாவூர்–கும்பகோணம்–மயிலாடுதுறை இடையே இரட்டை ரயில் பாதை அமைப்பது குறித்து ரயில்வே துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இன்று மாலையும் நாளையும் மகாமகக் குளம் மற்றும் தொடர்புடைய 17 கோவில்களில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளனர்.
இதையும் படிங்க: களேபரமான சட்டசபை: முதல்வர் நுழையும்போது எழுந்து நிற்க வேண்டுமா? அமைச்சர் ரமேஷ் கேள்வி; திமுக எதிர்ப்பு!!