தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய திருக்கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் ஆன்மிகச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், செல்போன் கொண்டு செல்லும் நடைமுறையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இன்று செப்டம்பர் 1 முதல் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 52 பெரிய கோயில்களில் பக்தர்கள் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, கோயிலுக்குள் புகைப்படம், வீடியோ, செல்பி மற்றும் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றும் போக்கு அதிகரித்து வந்ததால் எடுக்கப்பட்டது. ஏற்கனவே பல கோயில்களில் பயன்பாட்டுக்குத் தடை இருந்தபோதிலும், புகார்கள் தொடர்ந்ததால் இப்போது கொண்டு செல்வதற்குமே முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, கேமரா வசதியுள்ள செல்போன்களுக்கு மட்டுமே இந்தக் கட்டுப்பாடு பொருந்தும் என்றும், கேமரா இல்லாத செல்போன்களை கொண்டு செல்ல எந்தத் தடையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் உரிய ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பக்தர்களின் கவனத்திற்கு.. ரீல்ஸ், போட்டோவுக்கு ‘செக்’! 52 கோவில்களில் நாளை முதல் செல்போன் தடை!!
வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், குன்றத்தூர் முருகன், மாங்காடு காமாட்சி, பெரியபாளையம் பவானி அம்மன், வல்லக்கோட்டை சுப்பிரமணியர், காஞ்சிபுரம் காமாட்சி-வரதராஜர்-ஏகாம்பரநாதர், திருவள்ளூர் வீரராகவர், திருத்தணி முருகன் உள்ளிட்ட பல கோயில்கள் இப்பட்டியலில் அடங்கும். அதேபோல் திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை, சமயபுரம், ஸ்ரீரங்கம், நெல்லையப்பர், சுசீந்திரம், மதுரை அழகர், கோவை கோணியம்மன், சேலம் கோட்டை மாரியம்மன், ராமேசுவரம் போன்ற முக்கிய தலங்களிலும் இன்று முதல் இந்நடைமுறை அமலாகியுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக கோயில் நுழைவு வாயில்கள் மற்றும் காலணிப் பாதுகாப்பு மையங்களுக்கு அருகில் செல்போன் பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் வசூலித்து ரசீது வழங்கப்படும். பெரிய கோயில்களில் சுமார் 20 ஆயிரம் செல்போன்களை வைக்கும் அளவுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவிழாக் காலங்களில் அதிகப் பக்தர்கள் வரும்போது இடநெருக்கடி ஏற்படாமல் இருக்க, வீடுகள் அல்லது வாகனங்களில் செல்போன்களை விட்டுவிட்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோயிலுக்குள் அனுமதியின்றி புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்தால், பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த நடவடிக்கை ஆன்மிக அனுபவத்தை மேம்படுத்தி, பக்தர்கள் அமைதியாக தரிசனம் செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: களேபரமான சட்டசபை: முதல்வர் நுழையும்போது எழுந்து நிற்க வேண்டுமா? அமைச்சர் ரமேஷ் கேள்வி; திமுக எதிர்ப்பு!!