கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்த 28 வயது யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் நடந்த 118 பவுன் தங்க நகைக் கொள்ளை சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏலக்காய் வியாபாரியின் மனைவியான இவர், பல ஆண்டுகளாக தங்க நகைகள் மற்றும் பணக்கட்டுகளுடன் ரீல்ஸ் வெளியிட்டு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றிருந்தார்.
இதையொட்டி, கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தபோது, கொள்ளையர்கள் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்து சுமார் 118 பவுன் தங்க நகைகளையும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தையும் திருடிச் சென்றனர்.
ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 98 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. ஆனால் இப்போது புதிய திருப்பமாக, மதுமிதா மீதே திருட்டுப் புகார் வந்துள்ளது. திருநெல்வேலி கே.டி.சி. நகரைச் சேர்ந்த 89 வயது கட்டிட ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து, 2022 ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: மதுபோதையில் தகராறு! 4 சவரன் நகைக்காக நண்பருக்கு நேர்ந்த கொடூரம்? குளத்தில் மிதந்த சடலம்!

அவரது புகாரின்படி, முதுகுவலிக்காக பிசியோதெரபி சிகிச்சை பெறும்போது மதுமிதாவுடன் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் ஒருமுறை நெல்லை நீதிமன்றம் அருகே அவரது காரில் ஏறி, மசாஜ் செய்வதாகக் கூறி பயணம் செய்தார். பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டு வீடு திரும்பியதும், கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்தது. கேட்டபோது மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் ராஜாக்கமங்கலம் போலீசார் ஜீரோ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, சம்பவம் நெல்லையில் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருப்பதால் வழக்கை பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு மாற்றினர். இருப்பினும், இரண்டு நாட்களுக்குப் பிறகும் புதிய எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை. தாலுகா போலீசார், புகார்தாரரிடம் முதலில் விசாரணை நடத்திய பிறகே வழக்குப்பதிவு செய்ய முடியும் என்று விளக்கமளித்துள்ளனர்.
இதற்கிடையே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஷ் பா. சாஸ்திரி, விசாரணை தொடங்கிவிட்டதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதுமிதா கைது செய்யப்படுவார் என்றும் உறுதியளித்துள்ளார். சமூக வலைதளங்களில் செல்வாக்கு பெற்றிருந்த மதுமிதா, தற்போது இரு வேறு வழக்குகளின் மையமாக மாறியுள்ளார். போலீஸ் விசாரணை முடிந்த பிறகே உண்மை வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருநெல்வேலி அல்வா டா..!! 'Best Sweet Shop' - தேசிய அளவில் கிடைத்த விருது!!