கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றுத்திருவிழாவில் பலூன் சிலிண்டர் வெடித்துப் பெண் ஒருவர் பலியான சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மணலூர்பேட்டை ஆற்றுத்திருவிழாவில் பலூன்களுக்கு எரிவாயு நிரப்பப் பயன்படுத்தப்பட்ட ஹீலியம் சிலிண்டர் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் வேங்கயவெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கலா என்ற பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது வரை 13 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்,
விபத்து ஏற்படுத்திய சிலிண்டர்களுக்கு முறையான உரிமம் மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ் உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர், "தற்போது காவல்துறையினர் இது குறித்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உரிமம் தொடர்பான விபரங்கள் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து விசாரணைக்கு பின்னரே முழுமையாகத் தெரியவரும். வரும் காலங்களில் நடைபெறும் ஆற்றுத்திருவிழாக்களில் இது போன்ற விபத்தை ஏற்படுத்தக்கூடிய சிலிண்டர்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா என்பது குறித்தும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த தடயவியல் நிபுணர் ராஜீவ் தலைமையிலான குழுவினர், சிலிண்டரின் இரும்புத் துகள்களைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். வெடிக்காமல் இருந்த மற்றொரு சிலிண்டரைத் தீயணைப்புத் துறையினர் குளிர்ச்சியடை செய்து அதிலிருந்த ஆபத்தான வாயுவைப் பாதுகாப்புடன் வெளியேற்றினர். மணலூர்பேட்டை போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக ‘எஃப்.ஐ.ஆர்’ பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பலூன் கடைக்காரர் மற்றும் சிலிண்டர் விநியோகஸ்தர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த உடனடி அதிரடி நடவடிக்கைகள் திருவிழா மைதானத்தில் நிலவிய பதற்றத்தைச் சற்றே தணித்துள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி சிலிண்டர் விபத்து - அரசின் அலட்சியத்தால் நேரிட்ட கொடூரம்! அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இரங்கல்!
இதையும் படிங்க: உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் கோர விபத்து! கவிழ்ந்த லாரி மீது 3 ஆம்னி பேருந்துகள் மோதி 10 பேர் படுகாயம்!