உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி நகரில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த பேராதரவைக் கண்டு பொறாமையடைந்த தீவிர வலதுசாரி அமைப்பினர், கார்கே எளிய சமூகப் பின்னணியில் இருந்து உயர்ந்தவர் என்பதைக் காரணமாகக் கொண்டு, அவர் பங்கேற்றதால் அந்த இடம் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி கங்கை நீரைத் தெளித்து அந்த இடத்தை சுத்திகரிப்பு செய்தனர்.
சாதிய வன்மத்துடனும் தீண்டாமை மனநிலையுடனும் நடத்தப்பட்ட இந்தப் பிற்போக்குத்தனமான செயல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு மட்டுமல்ல, சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி மற்றும் மனித மாண்பை நிலைநாட்டும் இந்திய அரசியலமைப்பிற்கே விடுக்கப்பட்ட சவாலாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இந்த அவமதிப்புச் செயலையும் சாதிய பாகுபாட்டு மனநிலையையும் வன்மையாகக் கண்டித்து, கார்கேவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முழுமையான ஆதரவைத் தெரிவித்தும், நாளை 14.08.2026 மாலை தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் கண்டன சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.மாவட்டத் தலைவர்கள் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டம் அண்ணல் காந்தியடிகள் சிலையிலிருந்து தொடங்கி, புரட்சியாளர் அம்பேத்கர் சிலை முன்பு நிறைவு பெறும் வகையில் அமைக்கப்படும்.
இதையும் படிங்க: 12 வருடங்களாக கல்வியை சீரழித்த பாஜக அரசு... தொடரும் போராட்டங்கள்...! மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு..!
அங்கு சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தி, சாதிய பாகுபாடு மற்றும் தீண்டாமை மனநிலைக்கு எதிரான காங்கிரஸ் பேரியக்கத்தின் உறுதியான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என மாணிக்கம் தாகூர் அறிவுறுத்தியுள்ளார்.மாவட்ட, வட்டார நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்று, இந்தப் போராட்டத்தை எழுச்சியுடனும் வலிமையுடனும் நடத்திடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரான சாதிய மனநிலைக்கு இந்திய மண்ணில் இடமில்லை என்பதை உரக்கச் சொல்வோம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை மசோதா 2026: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!