சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிரிவென்டிவ் மெடிசின் அண்ட் ரிசர்ச் (King Institute of Preventive Medicine and Research) வளாகத்தில், குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
இது தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் முதன்முறையாக குழந்தைகளுக்கென தனியாக அமைக்கப்படும் உலகத் தரம் வாய்ந்த உயர்சிறப்பு மருத்துவமனையாகும். 2024 ஜூலை 28-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்தத் திட்டத்தை அறிவித்திருந்தார். அதன்படி, இந்த மருத்துவமனை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 6.50 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது.

மொத்தத் திட்டச் செலவு ரூ.417.07 கோடி ஆகும். இந்த வளாகத்தில் ஏற்கனவே கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய குழந்தைகள் உயர்சிறப்பு மருத்துவமனை 4.63 லட்சம் சதுர அடி கட்டடப் பரப்பளவுடன் கூடியதாக இருக்கும். இதில் ஆறு தளங்கள் கொண்ட முதன்மை மருத்துவமனைக் கட்டடம் அமையவுள்ளது.
இதையும் படிங்க: இதுவரை 3 லட்சம் பெண் குழந்தைகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி..! தமிழ்நாடு முன்னோடி... முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!
மேலும், மருத்துவ பயிற்சியாளர்கள், செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தனி விடுதிக் கட்டடங்களும் இதில் அடங்கும். மருத்துவமனையில் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவு, கார்டியாலஜி, நியூராலஜி, பல்மனாலஜி, நெப்ராலஜி, ஹீமாட்டாலஜி, காஸ்ட்ரோஎன்டராலஜி, ஆர்த்தோபெடிக்ஸ், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை, தீவிர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்ட மேம்பட்ட துறைகள் இடம்பெறும். தனித்துவமான ஆராய்ச்சி ஆய்வகங்களும் அமைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! முன்னாள் ராணுவ வீரரை தட்டி தூக்கிய போலீஸ்..!