நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு சுற்றுலாவுக்காக சென்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கும்பகோணம் வட்டாட்சியர் பூங்கொடி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள போதேகோசி ஆற்றில் திடீரென பெருகிய வெள்ளம் காரணமாக திமூர், சியாப்ரூபேசி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
திபெத் எல்லைப் பகுதியில் இருந்து வந்த நீர்வரத்து மற்றும் கனமழை காரணமாக ஆறு சீறிப்பாய்ந்தது. இதனால் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் பெருமளவில் சேதமடைந்தன. மீட்புப் பணிகளிலும் கடுமையான சிரமம் ஏற்பட்டுள்ளது.இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். நேபாள அதிகாரிகளின் தகவலின்படி குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள முதற்கட்ட தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 384 சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகளை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவர்களில் 291 பேர் வெளிநாட்டவர்கள் மற்றும் 93 பேர் நேபாள நாட்டவர்கள். வெளிநாட்டவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சுமார் 105 இந்தியர்கள் தொடர்பு இன்றி உள்ளதாக முதற்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை பயண நிறுவனங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலானது என்றும், முழுமையாக சரிபார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டிலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்களின் நிலை குறித்தும் கவனம் திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தஞ்சாவூர் மாவட்டம், குறிப்பாக கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சுமார் 100 பேருக்கு மேல் மூன்று பேருந்துகளில் அப்பகுதிக்குச் சென்றிருந்தனர். அவர்களில் சிலர் வெள்ளத்தில் சிக்கினாலும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. எனினும், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேரை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என கும்பகோணம் வட்டாட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார். அவர்கள் எந்தப் பகுதியில் உள்ளனர், அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்த தகவல்களை அறிய அதிகாரிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் நிலை குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.நேபாள ராணுவம் ஹெலிகாப்டர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், நிலப்பரப்பின் கடினத்தன்மை மற்றும் தொடரும் வெள்ளநிலை காரணமாக சில பகுதிகளை அடைவதில் சவால்கள் நீடிக்கின்றன. இந்திய அரசு தரப்பிலும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் மூலம் பாதிக்கப்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகளைக் கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்.. மீட்பதில் சிக்கல்... அவசர உதவி எண்கள் அறிவிப்பு..!!