பிரான்ஸ் நாட்டின் பிரபல பாப் பாடகரும் நடிகருமான பேட்ரிக் புரூயல் மீது பல பெண்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
67 வயதான பேட்ரிக் புரூயல், 1980 மற்றும் 1990-களில் பிரான்ஸ் இசை உலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்தார். பல வெற்றிப்பாடல்களை வழங்கியதுடன், 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். பிரான்ஸ் மட்டுமின்றி ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 1997, 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பாக மூன்று பெண்கள் அதிகாரப்பூர்வ புகார் அளித்திருந்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணை முன்னேறியபோது, மேலும் பல பெண்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.
இதையும் படிங்க: டெல்லி தீ விபத்து எதிரொலி! ஆக்ஷனில் இறங்கிய அரசு! 94 கட்டிடங்கள் இடிப்பு! 114 கட்டிடங்கள் சீல்!
விசாரணையில், மொத்தம் 13 பெண்கள் பேட்ரிக் புரூயலுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனினும், தனது மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் பேட்ரிக் புரூயல் திட்டவட்டமாக மறுத்துள்ளார். எந்தவித தவறும் செய்யவில்லை என்றும், தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்றும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் இசை மற்றும் திரைப்பட உலகில் பல தசாப்தங்களாக முக்கிய இடத்தை பிடித்திருந்த ஒரு பிரபல நட்சத்திரம் இத்தகைய வழக்கில் சிக்கியிருப்பது அந்நாட்டு பொழுதுபோக்கு துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மீது பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமா அல்லது பேட்ரிக் புரூயல் தன்னை சட்டரீதியாக நிரபராதி என நிரூபிப்பாரா என்பது தொடர்பான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கடவுளின் தேசத்தில் கருணை காட்டாத வானிலை! கனமழை, மரம்முறிவு, சுவர் இடிந்து 7 பேர் மரணம்!