இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக இரயில் போக்குவரத்து அமைப்பான நமோ பாரத், டெல்லி - மீரட் இடையிலான தனது முழுமையான 82 கி.மீ வழித்தடச் சேவையை இன்று முதல் தொடங்குகிறது. உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சதாப்தி நகர் நிலையத்தில் நடைபெறும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.
ஏற்கனவே 55 கி.மீ தூரம் செயல்பாட்டில் உள்ள நிலையில், இன்று டெல்லியின் சாராய் காலே கான் - நியூ அசோக் நகர் (5 கி.மீ) மற்றும் மீரட் தெற்கு - மோடிபுரம் (21 கி.மீ) ஆகிய எஞ்சிய பகுதிகள் திறக்கப்படுகின்றன. இதன் மூலம் ஒட்டுமொத்த 82.15 கி.மீ வழித்தடமும் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. சாலை வழியாக டெல்லியில் இருந்து மீரட் செல்ல 1.5 மணிநேரம் ஆகும் நிலையில், நமோ பாரத் இரயில் மூலம் இந்தத் தூரத்தை வெறும் 55 நிமிடங்களில் கடக்க முடியும். இதன் வடிவமைப்பு வேகம் மணிக்கு 180 கி.மீ ஆகும்.

நமோ பாரத் இரயிலுடன் இணைந்து, மீரட் நகரத்திற்குள்ளான போக்குவரத்திற்காக 'மீரட் மெட்ரோ' சேவையும் இன்று தொடங்கப்படுகிறது. இது இந்தியாவின் அதிவேக மெட்ரோ (மணிக்கு 120 கி.மீ) என்ற பெருமையைப் பெறுகிறது. ஒரே தண்டவாளக் கட்டமைப்பில் நமோ பாரத் மற்றும் மெட்ரோ இரயில்கள் இயங்குவது இதுவே முதல் முறையாகும். டெல்லியின் சாராய் காலே கான் நிலையம், ஹஸ்ரத் நிஜாமுதீன் இரயில் நிலையம், பிங்க் லைன் மெட்ரோ மற்றும் பேருந்து நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக மாற்றப்பட்டுள்ளது. 10 நிமிடங்களுக்கு ஒரு இரயில் என்ற வீதத்தில் சேவை வழங்கப்படும். இரயில்களில் 2x2 இருக்கைகள், பெண்களுக்குத் தனிப் பெட்டி, சிசிடிவி, வைஃபை மற்றும் மொபைல் சார்ஜிங் வசதிகள் உள்ளன.
இதையும் படிங்க: தோல்வி பயத்தில் மாநில சுயாட்சி பேசும் ஸ்டாலின்.... தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்!
இன்று மதியம் 12:30 மணியளவில் சதாப்தி நகரில் இரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கும் பிரதமர், அங்கிருந்து மீரட் தெற்கு நிலையம் வரை மெட்ரோவில் பயணம் செய்கிறார். தொடர்ந்து, சுமார் ₹12,930 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து உரையாற்றுகிறார்.
இதையும் படிங்க: மார்ச் தமிழகம் வரும் பிரதமர்.. மதுரை மற்றும் வேலூரில் பொதுக்கூட்டம்! முன்னேற்பாடுகள் தீவிரம்!