அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி. புரட்சித் தலைவி இதயதெய்வம் அம்மா அவர்கள் வளர்த்தெடுத்த கட்சி. புரட்சித் தமிழர் ஐயா எடப்பாடி பழனிசாமி போன்ற ஒரு சாமானியர் இன்று கட்டிக்காத்து வரும் கட்சி. இந்தக் கட்சியை அபகரிக்க நினைப்பது எந்த வகையில் நியாயம்? மக்களே, எங்களுக்கு நீங்கள்தான் நீதி வழங்க வேண்டும். நீங்கள்தான் நீதிபதிகள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!
இந்த அத்துமீறலுக்கும், அநியாயத்துக்கும், அக்கிரமத்துக்கும் இது ஒரு சான்று. பாருங்கள், இது எவ்வளவு கேவலமான செயல்! அப்படியானால், உங்களுடைய தலைவர் யார்? நீங்கள் கொள்கைத் தலைவராக வைத்திருப்பவரைக் கொண்டாடுங்கள்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்ற மனிதப் புனிதர் உருவாக்கிய கட்சிதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அந்தக் கட்சிக்குக் கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். பொதுச்செயலாளரும் இருக்கிறார். இப்போது அந்தக் கட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். நான் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். இவர் மாவட்டப் பொருளாளராக இருக்கிறார். அவர் அம்மாவின் பெயரில் செயலாளராக இருந்து வெற்றி பெற இருக்கிறார். இவ்வாறு கோடிக்கணக்கான தொண்டர்களும், லட்சக்கணக்கான நிர்வாகிகளும் இருக்கிறார்கள். எங்களுக்கென்று ஒரு கட்டமைப்பு இருக்கிறது.
இதையும் படிங்க: விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு.. தவெக ஆட்சியில் தள்ளாடும் மக்கள்... ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்...!
வெற்றி, தோல்வி என்பது ஜனநாயகத்தில் சகஜமான ஒன்று. இன்று இரண்டு தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்துவிட்டால், தமிழக வெற்றிக் கழகம் நிரந்தரமான கட்சியாக இருக்குமா? ஒருவேளை தோல்வி ஏற்பட்டால், அதற்குப் பிறகும் தமிழக அரசியலில் அக்கட்சி நிலைத்து நிற்குமா? போராடுமா? அந்தப் போராட்டக் குணம் இருக்கிறதா?
அந்தக் கட்சியில் இப்போது பக்கவாத்தியம் வாசிக்கும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆதவ் அர்ஜுனாவுக்கு என்ன அரசியல் வரலாறு இருக்கிறது? இன்று சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் வெளியாகி வருகின்றன. திமுகவில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அதன்பிறகு அங்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவனிடம் சென்றார். அதன்பிறகு, அதிமுக பொதுச்செயலாளரிடம் துணைப் பொதுச்செயலாளர் பதவி கேட்டார். இதை அதிமுக பொதுச்செயலாளரே கூறியிருக்கிறார். உழைத்தவர்களுக்குத்தான் அந்தப் பதவியை வழங்க முடியும் என்று அவர் தெரிவித்தார். அதன்பிறகுதான் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சென்றார். இதுதான் அவரது அரசியல் வரலாறு.
அதேபோல், நம்முடைய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் எங்கெங்கெல்லாம் இருந்தார், எந்தெந்தக் கட்சிகளில் பயணித்தார் என்பதையும் பாருங்கள். பல கட்சிகளுக்குச் சென்றுவிட்டு, கடைசியாகத்தான் தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சென்றிருக்கிறார். ஏதோ பிறந்ததிலிருந்தே விஜய்யின் ரசிகர் மன்றத்தில் இருந்து அவருக்காக உழைத்தவர்கள் போல இப்போது பேசுகிறார்கள். ஆனால், அவர்கள் எந்தக் கட்சியிலும் சேர்க்கப்படாமல் இருந்துவிட்டு, கடைசியில் இந்தக் கட்சியில் வந்து சேர்ந்தவர்கள்.
234 தொகுதிகளில் 104 தொகுதிகளில், வேறு கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமலும், சொந்தக் கட்சியில் வாய்ப்பு கிடைக்காமலும் இருந்த சிலர், கடைசி புகலிடமாக இங்கு வந்தார்கள். சீமான் கட்சியிலும் வாய்ப்பு கேட்டு கிடைக்காமல், அதன்பிறகு இங்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய அதிர்ஷ்டத்தால் வெற்றி பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு இது ஒரு பம்பர் பரிசு போன்ற வெற்றி.
அந்த 104 தொகுதிகளில் 49 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது அதிர்ஷ்டத்தால் கிடைத்த பம்பர் பரிசு போன்ற வெற்றி. அவர்களில் ஏழு பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டுக்காக என்ன செய்திருக்கிறார்கள்? என்ன சேவை செய்திருக்கிறார்கள்? எவ்வளவு உழைத்திருக்கிறார்கள்? பேரிடர் காலங்களில் மக்களுக்காக உழைத்தார்களா? போராட்டக் களங்களில் நின்றார்களா? தமிழுக்காகக் குரல் கொடுத்து நின்றார்களா? இதையெல்லாம் மக்கள் அறிய மாட்டார்களா?
மக்கள் ஏன் வாக்களித்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. மக்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்போம் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். எனவே, மக்களுக்கு நல்லாட்சியை வழங்குங்கள். மக்களுக்குச் சேவை செய்யுங்கள். மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துங்கள். அதை விட்டுவிட்டு, அடுத்த கட்சியை அழிக்க வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம்?
இதையும் படிங்க: அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை... தவெகவில் உச்சக்கட்ட புகைச்சல்... விஜயை வெளிச்சம் போட்டு காட்டிய ஆர்.பி.உதயகுமார்...!