நாம் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீர் மற்றும் மின்சாரத்தைப் போலவே, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் (AI) ஒரு மீட்டர் சேவையாக மாறும் என்று ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மான் கணித்துள்ளார். எதிர்காலத்தில் மக்கள் AI-ஐ எவ்வளவு பயன்படுத்துகிறார்களோ, அந்த அளவிற்கு மட்டுமே கட்டணம் செலுத்தும் நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் கல்வி, மருத்துவம், மென்பொருள் உருவாக்கம் எனப் பல துறைகளில் AI தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. மக்கள் தினமும் காலையில் எழுந்தது முதல் உறங்கும் வரை பல்வேறு வடிவங்களில் AI-ஐப் பயன்படுத்துவதால், இது ஒரு Utility எனப்படும் அடிப்படைப் பயன்பாட்டுச் சேவையாக அங்கீகரிக்கப்படும் என ஆல்ட்மான் கருதுகிறார்.

தற்போது பல AI கருவிகள் மாதந்திரச் சந்தா முறையில் உள்ளன. ஆனால் விரைவில் இது மாறி, மின்சார மீட்டர் போல நாம் எவ்வளவு தரவுகளை அல்லது எவ்வளவு நேரம் AI-ஐப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துக் கட்டணம் வசூலிக்கப்படும் முறையே நிலையானதாக இருக்கும் என அவர் கணித்துள்ளார்.
இதையும் படிங்க: AI-ஐ கண்டு பயப்பட வேண்டாம்.. வாய்ப்பாக பாருங்கள்..!! இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் 'நச்' அட்வைஸ்..!!
AI என்பது ஒரு புதிய வகை மின்சாரம் போன்றது. அது இல்லாமல் எதிர்காலத்தில் எந்தவொரு கருவியும் இயங்காது என்று குறிப்பிட்ட அவர், இதன் மூலம் சாமானிய மக்களும் தங்களுக்குத் தேவையான அளவு மட்டும் AI சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என விளக்கமளித்துள்ளார்.
இந்த மாற்றம் நிகழ்ந்தால், AI நிறுவனங்கள் தரமான சேவையை வழங்குவதில் அதிக கவனம் செலுத்தும் என்றும், இது உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் கிளவுட் சேவைகளில் இத்தகைய 'Pay-as-you-go' முறையைப் பின்பற்றி வரும் நிலையில், சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற நுகர்வோர் செயலிகளிலும் இந்த மாற்றம் விரைவில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: ஆட்டம் காட்டும் AI..!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவு..!! ஷாக்கான ஊழியர்கள்..!!