சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நக்சல் வேட்டையை தீவிரப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, சத்தீஸ்கர் வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் நக்சல்களை வேட்டையாடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. சிஆர்பிஎப் மற்றும் மாநில அதிரடிப்படை போலீசார் மலை, வனப்பகுதியில் களம் இறங்கியுள்ளனர்.
இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே சத்தீஸ்கரில் நுாற்றுக்கணக்கான நக்சல்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசிடம் சரண் அடைந்தனர். அவர்களின் புதிய வாழ்க்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டுள்ளது. நக்சல் பாதித்த பகுதிகள், அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவதால், அங்கு அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, கடந்த 21 நாட்களாக சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையை ஒட்டி அமைந்துள்ள குர்ரகுட்டலு மலையில் நக்சல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. அங்கு பதுங்கியிருந்த நக்சல்களை சரண் அடையச் செய்யும் நடவடிக்கையில் கூட்டு அதிரடிப்படை களத்தில் இறங்கியது. அப்போது, பலர் சரண் அடைந்த நிலையில், ஒரு சில நக்சல்கள் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் அனுசரிச்சு போகணும்.. இந்தியாவுக்கு நெருக்கடி.. டீலை முடித்த அமெரிக்கா..!
இதையடுத்து, அந்த பகுதியில், ஆயிரக்கணக்கில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து நடந்த இரு தரப்பு சண்டையில் நக்சல் அமைப்பை சேர்ந்த 31 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் அந்த அமைப்பை வழிநடத்திய தலைவர்கள் ஆவர். அவர்களின் தலைக்கு பல லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

நக்சல் வேட்டையில் சிறப்பாக செயல்பட்ட சிஆர்பிஎப், சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். நக்சல்களுக்கு எதிரான வேட்டையில் இது ஒரு புதிய மைல்கல். 21 நாட்கள் நடந்த வேட்டையைில், முக்கிய நக்சல்கள் 31 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பாதுகாப்பு படை தரப்பில் ஒரு உயிர் சேதம் கூட ஏற்படவில்லை.
ஒரு காலத்தில் நக்சல்களின் கோட்டையாக திகழ்ந்த குர்ரகுட்டலு மலையில் தற்போது மூவர்ண கொடி பறக்கிறது. தேசத்திற்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட நக்சல்கள், அவர்களின் பயிற்சி மையங்கள் அழிக்கப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நக்சல் ஒழிப்பு முயற்சியில் தற்போதைய நடவடிக்கை வரலாறு படைத்துள்ளது. ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் என்ற பெயரில் நடந்த இந்த நடவடிக்கையால், நக்சல் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் இனி வளர்ச்சியின் பாதையில் நடைபோடும்.

மோசமான காலநிலை, சூழல்களுக்கு இடையே நக்சல்களுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ள நம் வீரர்களுக்கு பாராட்டுக்கள். பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் நக்சல் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என, அமித் ஷா கருத்து பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பத்மபூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்..! ஜனாதிபதி திரவுபதி முர்மு கௌரவிப்பு..!